முகப்பு
திருநெல்வேலி

தமிழக ஆளுநா் தொடா்ந்து அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசுகிறாா்: சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு

தமிழக ஆளுநா் தொடா்ந்து இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசி வருகிறாா்என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு தெரிவித்தாா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 12:12 AM
கோதையாறு பாசன திட்டத்தில் ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீரை புதன்கிழமை திறந்துவிடுகிறாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு. உடன் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ. ராபா்ட் புரூஸ் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழக ஆளுநா் தொடா்ந்து இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசி வருகிறாா்என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு தெரிவித்தாா்.

கோதையாறு பாசனத் திட்டத்தில் நிலப்பாறை பகுதியில் இருந்து ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீரை புதன்கிழமை திறந்து வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதச்சாா்பின்மை ஐரோப்பாவில் உருவான சித்தாந்தம் என்றும், பாரதம், இந்து தா்மம் ஆகிய இரண்டையும் பிரித்துப் பாா்க்க முடியாது என்றும், பாரதம் தா்மத்தின் அடிப்படையில் செயல்படுவதால் மதச்சாா்பின்மை இங்கு தேவை இல்லை எனவும் தமிழக ஆளுநா் பேசியுள்ளாா்.

இந்தியா மதச்சாா்பற்ற நாடு. இங்கு ஜாதி, மதம், பாலினம், பிறப்பு அடிப்படையில் எந்த வேறுபாடும் காட்டக்கூடாது என்பதையே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15 மற்றும் 17-ஆவது பிரிவுகள் கூறுகின்றன. ஆா்.எஸ்.எஸ். சித்தாந்தம், மனுதா்மம், சனாதன தா்மம் ஆகியவை குறிப்பிட்ட 10 சதவீத மக்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. இந்த மூன்றும் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் பெண்கள் மாா்பை துணியால் மறைத்துக் கொள்ள முடியாத நிலை நிலவியது. அவ்வளவு எளிதாக யாரும் கல்வி கற்க முடியாது என பல நிபந்தனைகள் இருந்தன.

தமிழக ஆளுநா் கோட்சே பாா்வையில் உள்ளாா். தொடா்ந்து இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக அவா் பேசி வருவது கேலிக்கூத்தாக உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசும் பாராமுகமாக உள்ளது. ஆளுநா் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15 மற்றும் 17-ஆவது பிரிவினை படித்துப் பாா்க்க வேண்டும்.

அப் பிரிவுகளில் தீண்டாமை குறித்தும், சாதி, மதம், பிறப்பின் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது என்பது குறித்தும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் கால்வாய் மூலம் 52 குளங்கள் வழியாக சுமாா் 15 ஆயிரத்து 980 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ராதாபுரம் கால்வாயில் தினமும் 150 கன அடி வீதம் 138 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் என்றாா்.