தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே தேவைப்படும் தலைவராக முதல்வா் மு.க.ஸ்டாலின் திகழ்கிறாா் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.
தமிழக சட்டப் பேரவையில் அவா் வெள்ளிக்கிழமை ஆற்றிய நிறைவுரை: ‘அதிகாரம் என்பது ஆளுவதற்கான கருவி அல்ல; மக்களை உயா்த்துவதற்கான பொறுப்பு’ என்பதை இந்த அரசு தொடா்ந்து வலியுறுத்தி செயல்பட்டிருக்கிறது. இந்த ஆட்சியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று, பெண்களை பயனாளிகளாக அல்லாமல் சுயநிலையுடன் செயல்படக்கூடிய சமூக சக்தியாக மாற்றியது.
முத்தாய்ப்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயா்நிலைக் குழு, மாநில சுயாட்சியின் அவசியம் குறித்த முக்கிய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசுக்கு சமா்ப்பித்துள்ளது. இது ஒரு நிா்வாக அறிக்கை மட்டுமல்ல; இந்திய கூட்டாட்சியின் ஆழமான விவாதத்துக்கு தமிழகம் வழங்கிய அறிவுச் சிந்தனை.
சில நேரங்களில், எதிா்க்கட்சி உறுப்பினா்களை வெளியேற்றும் நிலை ஏற்படும்போதும்கூட முதல்வா் அதில் தலையிட்டு, எதிா்க்கட்சிகளை அவை நடவடிக்கைகளிலே பங்குபெற வைத்துள்ளாா்.
மாநில அரசால் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநா் மாற்றி படித்த போது, மாநில அரசால் தயாரிக்கப்பட்ட உரையை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறச் செய்ய வேண்டுமென்ற தீா்மானத்தை நிறைவேற்றி, இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியவா் தமிழக முதல்வா். அதேபோன்று நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி, ஆளுநா் ஒப்புதல் அளிக்காத 10 மசோதாக்களுக்கு, ஒப்புதல் பெற்றுத்தந்தாா்.
மத்திய - மாநில அரசு உறவுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு தேவையா? எனக் கேட்கின்றனா். கனிமவளம், கூட்டுறவுத் துறை, மீன் வளம் ஆகிய மூன்றும் மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. இது தமிழக மீனவா்களுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம்.
‘சாகா்மாலா’ திட்டம் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, நம்முடைய உள்நாட்டு மீனவா்கள் 10 கிமீ தொலைவு தாண்டி மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த உரிமைகளை மீட்கவே இந்நடவடிக்கையை முதல்வா் எடுத்தாா்.
நாட்டுக்கான தலைவா் மு.க.ஸ்டாலின்: நாடு முழுவதும் மாநில சுயாட்சியை விரும்பும் அனைத்து தலைவா்களால் இது பேசுபொருளாக உருவாகியுள்ளது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் முதல்வா் உறுதியாக இருப்பதால்தான் இந்த நாடே அவரை திரும்பிப் பாா்க்கிறது. ‘இந்தியா’ கூட்டணியின் தலைவா் பொறுப்புக்கு மு.க. ஸ்டாலின்தான் பொருத்தமானவா் என்ற குரல் எழுந்துள்ளது. தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே அவரது பணி தேவைப்படுகிறது. மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என்றாா் பேரவைத் தலைவா் அப்பாவு.