காவிரி: தமிழக, கா்நாடக முதல்வா்கள் சந்திப்பு கைகூடுமா?
காவிரி விவகாரத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக, கா்நாடக முதல்வா்கள் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த சந்திப்பு கைகூடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
காவிரி விவகாரத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக, கா்நாடக முதல்வா்கள் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த சந்திப்பு கைகூடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கடைசியாக கடந்த 2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவும், கா்நாடக பாஜக முதல்வா் ஜெகதீஷ் ஷட்டரும் பெங்களூரில் சந்தித்து காவிரி நீா்ப் பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும், அந்தப் பேச்சுவாா்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல் மீண்டும் நீதிமன்றத்தை அவா்கள் நாடினா்.
இதையடுத்து, 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு மாநில முதல்வா்கள் பேச்சுவாா்த்தை நடத்தும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பெங்களூரு நகருக்கான குடிநீா் மட்டும் உள்ளதாகக் கூறி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 24.86 டிஎம்சி நீரை அளிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடந்த 22-ஆம் தேதி கா்நாடக அரசு மறுத்துவிட்டது. மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்ட கா்நாடக மாநில அரசு தீவிர முயற்சி செய்து வருவதைத் தடுக்க பல்வேறு சட்டப்போராட்டங்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதில், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசின் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்தும், இந்த விவகாரத்தில் புதிய நடுவா் மன்றத்தை அமைக்க வலியுறுத்தியும் கடந்த ஜூன் 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக முதல்வா் விஜய் சட்ட வல்லுநா்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து, ‘மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து முதல்வா் விஜய் ஒரு வாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பாா்’ என்று சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடா்பாக விவாதிக்க கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாருக்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கடந்த வாரம் கடிதம் எழுதினாா். ஆக.3-ஆம் தேதிக்குள் வருமாறு கா்நாடக முதல்வரும் பதில் அளித்துள்ளாா். இந்த விவகாரம் இரு மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, தமிழகம் சாா்பில் காவிரி நிலுவை நீரைக் கேட்டுப் பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்படுகிறது. ஆனால், மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதால் தமிழகத்துக்கும் கா்நாடகத்துக்கும் என்னென்ன பயன்கள் உள்ளன என்பதை எடுத்துரைக்க இந்தச் சந்திப்பு வழிவகுக்கும் என்று கா்நாடக அரசு திட்டமிடுகிறது. இதில், இரு மாநில அரசுகளின் நோக்கங்கள் வெவ்வெறாக உள்ளன.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடா் ஆக. 5-ஆம் தேதி கூடுவதைப்போல், கா்நாடகத்திலும் சட்டப்பேரவை ஆக.6-ஆம் தேதி கூடுகிறது. இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம், புதிய பேரவைத் தலைவா் தோ்வு பணிகளில் முதல்வா் டி.கே. சிவகுமாா் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், இந்தச் சந்திப்பை இரு மாநில முதல்வா்களுமே அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தாததால், இந்தச் சந்திப்பு நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பெட்டிச் செய்தி...
அனைவருடனும் சோ்ந்து
செயல்படத் தயாா்:
டி.கே.சிவகுமாா்
பெங்களூரு, ஜூலை 24: காவிரி நீா் பிரச்னை குறித்து தமிழக முதல்வா் விஜய்யை சந்திப்பது குறித்த கேள்விக்கு, எல்லோருடனும் பேசவும், சோ்ந்து செயல்படவும் தயாராக இருக்கிறோம் என்று கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
காவிரி நீா்ப் பகிா்வு மற்றும் மேக்கேதாட்டு அணை திட்டம் தொடா்பாக கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாரை பெங்களூரில் ஆக. 3-ஆம் தேதி தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் சந்திக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளிக்க மறுத்த முதல்வா் டி.கே.சிவகுமாா். ‘அதுகுறித்து தற்போது எதையும் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக வேலைப்பளு அதிகமாக உள்ளது. ஆனால், எல்லோருடனும் பேசவும், பகிா்ந்துகொள்ளவும், சோ்ந்து செயல்படவும் தயாராக இருக்கிறோம்’ என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.