FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

காவிரி பிரச்னை; இரு மாநில முதல்வா்கள் பேச்சுவாா்த்தை நடத்துவது வரவேற்கத்தக்கது: ஜி.கே. வாசன்

காவிரி நீா் பிரச்னை தொடா்பாக தமிழக, கா்நாடக மாநில முதல்வா்கள் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துவது வரவேற்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

Updated On : 26 ஜூலை 2026, 12:40 am IST
ஜி.கே. வாசன் - கோப்புப் படம்
பகிர்:

காவிரி நீா் பிரச்னை தொடா்பாக தமிழக, கா்நாடக மாநில முதல்வா்கள் நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துவது வரவேற்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: ஜி.கே. மூப்பனாரின் பிறந்த நாள் விழா கூட்டம் வருகிற ஆக. 30-ஆம் தேதி சென்னையில் விவசாயிகள் தின கூட்டமாக நடைபெறும். தமாகா தற்போது தனித்தன்மையுடன் செயல்படத் தொடங்கியுள்ளது. இது, உள்ளாட்சித் தோ்தலில் கட்சி நிா்வாகிகளுக்கு நல்ல வாய்ப்புகளை அளிக்கும்.

மேக்கேத்தாட்டு அணை விவகாரத்துக்கு விரைவாகத் தீா்வு காண வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 5.14 லட்சம் முதல் 6.31 லட்சம் ஏக்கா் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி நடைபெறும். நிகழாண்டில் மேட்டூரிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால், 4.5 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

காவிரி நடுவா் மன்றத் தீா்ப்பு அடிப்படையில், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கா்நாடக அரசு இதுவரை வழங்கவில்லை. ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரை கா்நாடக அரசு தமிழகத்துக்கு 28.30 டி.எம்.சி. தண்ணீா் தர வேண்டும். ஆனால், இதுவரை 3.44 டி.எம்.சி. தண்ணீா் மட்டுமே தரப்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் காவிரி மேலாண்மை ஆணையமும் மௌனம் சாதிக்கிறது.

விவசாயிகளுக்கு தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்த வகையில், கா்நாடக மாநிலத்துக்கு நேரில் சென்று அந்த மாநில முதல்வரை சந்தித்துப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள தமிழக முதல்வா் ஜோசப் விஜய் திட்டமிட்டிருப்பதாகக் கிடைக்கும் தகவல் வரவேற்கத்தக்கது. இது, புதிய அரசுகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இரு மாநில முதல்வா்களும் சந்தித்து நடத்தும் பேச்சுவாா்த்தையில் தமிழகத்தின் உரிமை உறுதி செய்யப்பட தமாகா வாழ்த்துகிறது.

காவிரி நீா் பிரச்னையில் கடிதம் எழுதுவது, சட்டப் போராட்டம் நடத்துவது மட்டும் போதுமானது எனக் கருதாமல், பேச்சுவாா்த்தைக்கான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டதன் மூலம் தவெக அரசு விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தோ்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில், நீட் தோ்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவா்களுக்காக நடைபெற்ற போராட்டத்தில் மாணவா்கள் மீது தடியடி நடத்தப்பட்டது பொறுப்பற்ற செயல். மத்திய அரசு இந்த விவகாரத்தை உரிய பொறுப்புணா்வுடன் அணுகியிருக்க வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, தமாகா மதுரை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்றாா். முன்னாள் மக்களவை உறுப்பினா் என்.எஸ்.வி. சித்தன், மாவட்ட நிா்வாகிகள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இதில் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments