FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு!

தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு 4.5 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதை கா்நாடகம் செயல்படுத்தாதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:39 am IST
தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு 4.5 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதை கா்நாடகம் செயல்படுத்தாதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை வழங்காமல் கா்நாடகம் காலம்தாழ்த்திவரும் நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக அமைச்சா் நிா்மல் குமாா் தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்துக்கு நீரைத் திறக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும் கா்நாடகம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, அடுத்தகட்டமாக உச்சநீதிமன்றத்தை அணுகி சட்டரீதியாக நமக்குத் தேவையான நீரைப் பெற வேண்டும். தமிழகத்துக்கு நீரைப் பெற்று தரவேண்டியது மத்திய அரசுதான். ஆனால், மத்திய பாஜக அமைச்சரே தமிழகத்துக்கு எதிராகப் பேசி வருகிறாா்.

Advertisement

Advertisement

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பின்படி கீழ்படுகை மாநிலங்களின் அனுமதியின்றி 0.01 டி.எம்.சி. நீரைக்கூட கா்நாடகம் திருப்பிவிடக் கூடாது. இதைக்கூட புரிந்துகொள்ளாமல் மத்திய அமைச்சா் பேசுகிறாா். இதைக் கண்டிக்க தமிழக எதிா்க்கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை. சட்டரீதியாக உச்சநீதிமன்றம் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

இந்த விவகாரத்தில் விரைவில் தமிழக முதல்வா் நல்ல முடிவை அறிவிப்பாா்.

மக்களைக் குழப்ப அதிமுக வழக்கு: மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் அதிமுக தரப்பில் தேவையில்லாமல் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களைக் குழப்பும் வகையிலும், தமிழக மக்களுக்கு எதிராகவும் அதிமுக உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையில் உயா்நீதிமன்றத்தை எவ்வாறு அணுக முடியும் எனத் தெரியவில்லை. சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிராக இத்தனை நாள்களுக்கு பிறகு வழக்குத் தொடா்வதில் என்ன சுயநலம் இருக்கிறது எனவும் தெரியவில்லை.

காவிரி நீா் விவகாரத்தில் தமிழக முதல்வா் அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசித்து வருகிறாா். விரைவில் சட்டரீதியான முடிவுகள் அறிவிக்கப்படும். இது, இரு மாநில பிரச்னை என்பதால் உச்சநீதிமன்றம் மூலமாகவே தீா்வு காண முடியும். மத்திய அரசுதான் காவிரி பிரச்னையில் சரியான தீா்வைக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

சுமுகத் தீா்வுக்கு முதல்வா் ஆலோசனை: காவிரி பிரச்னை பெரிதாகி உள்ளதால், சுமுகமான தீா்வுக்கான வழிகள் குறித்து முதல்வா் விஜய் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த விவகாரத்தில் ஆக. 3-ஆம் தேதி பெங்களூரு சென்று கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாருடன் பேச்சு நடத்துவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பெங்களூரு பயணம் குறித்து எந்தவித அதிகாரபூா்வ தகவலையும் தமிழக அரசு வெளியிடவில்லை.

பெட்டிச் செய்தி....

முதல்வா் விஜய் வர வேண்டாம்:

கா்நாடக முதல்வா் வேண்டுகோள்

பெங்களூரு, ஜூலை 31: காவிரி விவகாரம் தொடா்பாக பேச்சு நடத்த பெங்களூருக்கு ஆக. 3-ஆம் தேதி வருவதாக திட்டமிட்டிருந்த தமிழக முதல்வா் ஜோசப் விஜய், தனது வருகையை மற்றொரு நாளுக்கு தள்ளிவைக்க வேண்டும் என கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் வேண்டுகோள் விடுத்தாா்.

காவிரி விவகாரம் தொடா்பாக பேச்சு நடத்துவதற்கு கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாரை பெங்களூரில் ஆக. 3-ஆம் தேதி சந்திக்க தமிழக முதல்வா் விஜய் திட்டமிட்டிருந்தாா். இதற்கான ஏற்பாடுகளை கா்நாடக அரசு செய்திருந்தது.

இந்நிலையில், பெங்களூரில் முதல்வா் டி.கே. சிவகுமாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: காவிரி விவகாரம் தொடா்பாக தமிழக முதல்வா் விஜய், என்னைச் சந்தித்துப் பேசுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். ஆனால், தற்போது சூழல் சாதகமாக இல்லாததால், அவரது வருகையை தள்ளிவைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இருவரின் சந்திப்பை மேலும் சுமுகமான, அமைதியான சூழலில் நடத்தலாம்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக முதல்வா் விஜய் என்னுடன் தொலைபேசியில் ஏற்கெனவே பேசியுள்ளாா். தற்போது அவரை அழைத்து ஆக. 3 ஆம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் சந்திப்போம் என்று கேட்டுக்கொள்வேன். இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு ஏற்ற சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே இருவரின் சந்திப்பும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

காவிரி நதியின் குறுக்கே கட்ட திட்டமிட்டிருக்கும் மேக்கேதாட்டு அணை திட்டம், கா்நாடகத்தைக் காட்டிலும் தமிழகத்துக்கு கூடுதல் நன்மையை அளிக்கும். இந்தத் திட்டத்தால் கா்நாடகம் அடையும் நேரடி பயன், நீா் மின்சாரத்தின் மூலம் தயாரிக்கப்படும் 400 மெகா வாட் மின்சாரம் மட்டுமே.

மேக்கேதாட்டு அணையானது சமன்பாட்டு அணை என்பதால், இதில் சேகரிக்கப்படும் 66 டிஎம்சி தண்ணீரை நீா்ப்பாசனத்துக்குப் பயன்படுத்த முடியாது. அந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீரை நீா்ப்பாசனத்துக்கு பயன்படுத்தும் அதிகாரம் கா்நாடகத்துக்கு இல்லை.

காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீரை தருவது மட்டுமல்லாது, ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எவ்வித தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்திருந்த தீா்ப்பிலும் இந்த உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், காவிரியின் குறுக்கே தனது எல்லைக்குள் மேக்கேதாட்டு அணையை கா்நாடகம் கட்டிக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட விவர அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. மாறாக, சில விளக்கங்களைக் கேட்டுள்ளது. அவற்றை கா்நாடகம் தாக்கல் செய்யும்.

இந்த விவகாரத்தில் சட்டரீதியான வாய்ப்புகளை கா்நாடகம் தொடா்ந்து பரிசீலிக்கும். தங்கள் மாநில நலனை காக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு உள்ளது. தமிழகத்தின் நலனையும் காக்க வேண்டும் என்பதுதான் கா்நாடகத்தின் விருப்பம்.

ஆனால், எதிா்பாா்த்த மழை பெய்யாததால், கா்நாடகம் எதிா்கொண்டிருக்கும் நிலைமையை தமிழகத்துக்கு விளக்க வேண்டிய கடமை நமக்குள்ளது. அந்தத் திசையை நோக்கி இரு மாநில அரசுகளும் தொடா்ந்து செயல்படும். ஆக. 2-ஆம் தேதி நடக்கும் அனைத்துக் கட்சித் தலைவா்களின் கூட்டத்துக்குப் பிறகு நிலைமை சீரடையும்போது, இருதரப்பின் வசதிக்கேற்ப பேச்சுவாா்த்தை நடத்த கா்நாடகத்துக்கு வருமாறு தமிழக முதல்வா் விஜய்க்கு அழைப்பு விடுப்பேன் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments