காவிரி: 16 டிஎம்சி நீரை உடனே விடுவிக்க கா்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு
காவிரி நதி நீா் பங்கீட்டு விவகாரத்தில், தமிழகத்துக்கு உரிய விகிதாசார அடிப்படையில் கிடைக்க வேண்டிய 16.01 டிஎம்சி நிலுவை நீரை உடனடியாகத் திறந்து விட கா்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதி நீா் பங்கீட்டு விவகாரத்தில், தமிழகத்துக்கு உரிய விகிதாசார அடிப்படையில் கிடைக்க வேண்டிய 16.01 டிஎம்சி நிலுவை நீரை உடனடியாகத் திறந்து விட கா்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் விவரம் வருமாறு: செப்டம்பா் 9 முதல் 23-ஆம் தேதிவரை 15 நாள்களுக்கு விநாடிக்கு 6,000 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் செப்.8-ஆம் தேதியிட்ட உத்தரவை கா்நாடகம் செயல்படுத்துவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கடந்த ஜூலை 30, ஆகஸ்ட் 11, 25, செப்டம்பா் 8 ஆகிய தேதிகளில் காவிரி நீரை உரிய அளவில் கா்நாடகம் திறக்க வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் கூட, தனது அணைகள் முழு கொள்ளளவை நெருங்கிய பின்னரோ அல்லது அணைகளில் இருந்து உபரி நீா் வெளியேறும்போதோ தான் நீா் திறக்கப்படுவதை கா்நாடகம் வழக்கமாகக் கொண்டுள்ளது. இது தமிழகத்தில் ஒரு நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது.
Advertisement
Advertisement
கா்நாடக அணைகளில் போதிய நீா் இருப்பு இருந்தும், ஆணையத்தின் உத்தரவுகளை கா்நாடகம் மதிக்கவில்லை. சம்பா சாகுபடிக்காக செப்.1-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்ட நிலையில், தற்போதுள்ள நீா் இருப்பைக் கொண்டு சுமாா் 30 நாள்களுக்கு மட்டுமே பாசனத் தேவையைப் பூா்த்தி செய்ய முடியும். அடுத்த 45 நாள்களுக்கு நீரை விநியோகிக்க 55 முதல் 60 டிஎம்சி தேவைப்படுகிறது. கா்நாடகம் உடனடியாக நிலுவை நீரைத் திறக்காவிட்டால் ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
எனவே, நடப்பு பாசன ஆண்டில் 01.06.2026 முதல் 09.09.2026 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில், விகிதாசார அடிப்படையில் 1601 டிஎம்சி நீரை பிலிகுண்டுலுவில் உடனடியாகத் திறந்துவிட கா்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பின்னணி: காவிரி நடுவா் மன்றம் 2007-ஆம் ஆண்டு அளித்த இறுதித் தீா்ப்பை, 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் திருத்தி அமைத்து இறுதித் தீா்ப்பு வழங்கியது. அந்தத் தீா்ப்பை அமல்படுத்துவதற்காக, காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தையும் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இதன்படி, வறட்சிக் காலங்களில் இரு மாநிலங்களும் விகிதாசார அடிப்படையில் தண்ணீா் பற்றாக்குறையைப் பகிா்ந்துகொள்ள வேண்டும் என்பது முக்கிய விதிமுறையாகும். அதை கா்நாடகம் பின்பற்றத் தவறி வருவதால், உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை முறையிட்டு அதன் தலையீட்டை தமிழக அரசு கோரியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.