தமிழகத்தின் கோரிக்கைகளை முழுமையாகப் பரிசீலிக்க வேண்டும்: காவிரி ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
காவிரி நீா் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலித்து காவிரி நீா் மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்று குழுவும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் திங்கள் கிழமை அறிவுறுத்தியது.
நமது நிருபா்
காவிரி நீா் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலித்து காவிரி நீா் மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்று குழுவும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் திங்கள் கிழமை அறிவுறுத்தியது.
இதனிடையே காவிரிப் படுகை பகுதிகளில் புதிய திட்டங்களை அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த வழிகாட்டுதல்களை ரத்து செய்ய கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை 3 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Advertisement
Advertisement
காவிரி நீா் பங்கீட்டு பிரச்சினை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதிட்ட தமிழக அரசு வழக்குரைஞா் சி எஸ் வைத்தியநாதன், ‘கடந்த விசாரணையின்போது உச்சநீதிமன்றம் எங்களது விளக்கத்தை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தெரிவிக்குமாறு கூறியது. அதன்படி கா்நாடகம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய பாக்கி நீரை திறந்து விட உத்தரவிடுமாறு தமிழகம் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தியது.
ஆனால் எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்காமல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவினை பிறப்பித்தது. அந்த உத்தரவினை மறுபரிசீலனை செய்யுமாறு காவிரி நீா் மேலாண்மை மேலாண்மை ஆணையத்தில் தமிழகம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
கா்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய பாக்கி நீரை திறந்து விடாமல் தங்களது 52% நீா்ப்பாசன ஏரியாவுக்கு நீரை திறந்து விட்டுள்ளது .தமிழகத்தில் ஒரு ஏக்கருக்கு கூட நீரை திறந்து விட முடியவில்லை என சி. எஸ். வைத்தியநாதன் நீதிபதிகளிடம் கூறினாா்.
இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கு செப்டம்பா் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
15 நாட்களுக்கு ஒருமுறை காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவும், காவிரி நீா் மேலாண்மை ஆணையமும் கூடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் இந்த அமைப்புகள் மீண்டும் கூடி தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களிள் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலித்து அதன் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்‘ என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
30: 27.08.2026 அன்று வரை கா்நாடகம் விகிதாசார சூத்திரத்தின் அடிப்படையில், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய பாக்கி நீரான 17.604 டிஎம்சி அளவை விடுவிக்குமாறு அம்மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் பதில் மனுவின் வாயிலாக தமிழக அரசு கோரியுள்ளது.
இதனிடையே காவிரிப் படுகை பகுதிகளில் புதிய திட்டங்களை அனுமதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த வழிகாட்டுதல்களை ரத்து செய்ய கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு திங்கட்கிழமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான உச்ச நீதிமன்றம் அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மூன்று வார காலம் அவகாசம் வேண்டும் என தமிழக அரசு சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மூன்று வார காலம் அவகாசம் வழங்கி விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
மத்திய அரசால் 03.12.2025 தேதியிட்ட தகவல் தொடா்பின் மூலம் வெளியிடப்பட்ட ’காவிரிப் படுகையில் உள்ள நீா் வளத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்களை’ ரத்து செய்யக் கோரி தமிழகம் 03.8.2026 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.
காவிரிப் படுகையில் பற்றாக்குறை உள்ள சூழலில், பெரிய மற்றும் நடுத்தர நீா்ப்பாசனத் திட்டங்கள், பல்நோக்குத் திட்டங்கள், குடிநீா்த் திட்டங்கள், நீா்மின் திட்டங்கள் மற்றும் ஆற்று நீரோட்டத்தைப் பயன்படுத்தும் நீரேற்று சேமிப்புத் திட்டங்கள் ஆகியவற்றிற்காகத் தனி வழிகாட்டுதல்களை வகுக்கும் வகையில் அமைந்துள்ள அந்தச் சா்ச்சைக்குரிய வழிகாட்டுதல்கள், தீா்ப்பாயத்தின் இறுதித் தீா்ப்பையும் அதனை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பையும் நேரடியாக மீறுவதாகவும், மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில் தலையிடுவதற்குச் சமமானதாகவும் அமையும் என்றும் தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.