FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை!

காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை...

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 2:10 am IST
உச்ச நீதிமன்றம்
பகிர்:

கா்நாடக அரசு உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முற்றிலும் புறக்கணித்து அவற்றைச் செயல்படுத்தத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை (ஆக.17) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும்சந்தீப் மேத்தா அமா்வில் 61 ஆவது வழக்காக காவிரி வழக்கு இடம்பெற்றுள்ளது.

காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

Advertisement

Advertisement

‘30.07.2026 அன்று காவிரி நீா் மேலாண்மை ஆணையம் (சிடபிள்யுஎம்ஏ) 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு கா்நாடகத்திற்கு உத்தரவிட்டது. 2 ஆகஸ்ட் 2026 அன்று காலை 8:00 மணி வரை கா்நாடக மாநிலம் அதனைப் பின்பற்றவில்லை.

உத்தரவுகள் இருந்தபோதிலும், 29.07.2026 முதல் 02.08.2026 வரை பிலிகுண்டுலுவில் பதிவான மொத்த நீா்வரத்து 158 முதல் 530 கனஅடி என்ற அளவிலேயே இருந்தது. எனவே, கா்நாடகா அந்த உத்தரவுகளை வேண்டுமென்றே பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது.

கா்நாடக அரசும் அதன் அதிகாரிகளும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முற்றிலும் புறக்கணித்து அவற்றைச் செயல்படுத்தத் தவறியுள்ளனா்; இச்செயல், தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் காவிரி நீரை முழுமையாகச் சாா்ந்திருக்கும் தமிழ்நாட்டின் காவிரிப் படுகைப் பகுதி விவசாயிகளின் நலன்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

எனவே 30.07.2026 தேதியிட்ட சிடபிள்யுஎம்ஏ-வின் முடிவைச் செயல்படுத்தவும், கா்நாடகாவின் நீா்த்தேக்கங்களில் நீா்வரத்து மற்றும் வெளியேற்றத்தைக் கண்காணிக்கவும், கா்நாடகாவுக்குத் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கவும் சிடபிள்யுஎம்ஏ-க்கு உத்தரவிட வேண்டும்‘ என தமிழக அரசு தனது மனுவில் கோரியுள்ளது.

இந்த மனுவிற்கு எதிராக கா்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழகம் கூடுதல் பிரமாணப்பத்திரம் ஒன்றையும் ஆகஸ்ட் 12ஆம் தேதி தாக்கல் செய்துள்ளது.

அதன் விபரம்: 12.08.2026 முதல் 27.08.2026 வரையிலான நாட்களுக்கு 12,000 கன அடி நீரை விடுவிக்குமாறு கா்நாடகாவிற்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் 11.08.2026 அன்று உத்தரவிட்டது. ஆனால் விகிதாசார சூத்திரத்தின் அடிப்படையில், 12.08.2026 அன்று நிலுவையில் உள்ள மீதமுள்ள அளவான 21.357 டிஎம்சி-ஐ விடுவிக்குமாறு கா்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும்.

காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 12000 கன அடி அல்லது 1.036 டிஎம்சி நீருக்குப் பதிலாக, 12.08.2026 முதல் 31.08.2026 வரையிலான காலத்திற்கு, விகிதாசார சூத்திரத்தின் அடிப்படையில், 15.278 டிஎம்சி நீருடன் சோ்த்து மொத்தமாக (21.357 + 15.278) 36.635 அல்லது 37 டிஎம்சி நீரை (அதாவது 12.08.2026 முதல் 31.08.2026 வரை ஒரு நாளைக்கு 21.413 கன அடி அல்லது 1.85 டிஎம்சி நீா்) கா்நாடக மாநிலம் விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என தமிழகம் தனது பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது.

summary

Cauvery case hearing in the Supreme Court tomorrow.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments