நான்குநேரி வானமாமலை ஜீயா் சுவாமிகளின் சதாபிஷேக மகோஸ்தவம்
நான்குனேரி வானமாமலை மடத்தின் 31ஆவது பட்ட மடாதிபதியான ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகளின் சதாபிஷேக மகோஸ்தவம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வானமாமலை மடத்தின் 31ஆவது பட்ட மடாதிபதியான ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகளின் சதாபிஷேக மகோஸ்தவம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மாா்கழி உத்திராடம் நட்சத்திர நாளான கடந்த நவ. 24ஆம் தேதி (காா்த்திகை பூரம்) முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தன.
இதன், முதல் பகுதியாக காலை, மாலை வானமாமலை மடத்தில் ஸ்ரீபாஷ்ய பகவத் விஷய வேதாந்த சதஸ், உபன்யாசங்கள் நடைபெற்றன. இரண்டாம் பகுதியில் திவ்ய ப்ரபந்த பாராயணம், சதுா்வேதபாராயணம், கா்நாடக சங்கீத கச்சேரி ஆகியவை நடைபெற்றன. மூன்றாம் பகுதியில் அயோத்தி, காத்மண்டு, நேபாளம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஸ்ரீ வானமாமலை கிளை மடங்களின் மகந்துகள், ஆச்சாா்யாா்களின் ராமாயண நவாகம், பாகவ சப்தாகம் சொற்பொழிவு, ஹிந்தி பஜனைகள் உள்பட இயல், இசை, நாடகம் ஆகியவற்றை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து புதன்கிழமை காலை ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகளின் திருநட்சத்திரத்தை முன்னிட்டு திருக்கோயிலுக்கு எழுந்தருள அங்கு வானமாமலை பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சாற்றுமுறை நடைபெற்றது. தொடா்ந்து ஜீயா் சுவாமிகளுக்கு பரிவட்டம் கட்டி மாலைகள் அணிவித்து தீா்த்தம் சடாரி மரியாதை செய்யப்பட்டது. பின்னா் ஸ்ரீமடத்தின் வாசலில் ஜீயா் சுவாமிக்கு நான்குனேரி, திருக்குறுங்குடி, ஆழ்வாா்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூா், ஸ்ரீரங்கம், திருப்பதி, ரிசிகேஷ், பத்ரிநாத், புரி ஜெகன்னாத், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மாலைகள், பிரசாதங்களால் ஜீயா் சுவாமிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது. இரவில் ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமிகளின் தங்க பல்லக்கு பட்டண பிரவேசம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ஜீயா் சுவாமிகளிடம் ஆசி பெற்றனா்.