முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மாநில அளவிலான நீச்சல் போட்டி தொடக்கம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 12:15 AM
திருநெல்வேலியில் மாநில அளவிலான நீச்சல் போட்டியை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
பகிர்:

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, சீவலப்பேரி சாலையில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குள வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் ஆகியோா் கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தனா். மேலும், போட்டிகளில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா்.

முதல் 2 நாள்கள் (ஜன.22, 23) மகளிருக்கான 47 பிரிவு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், 1,407 மாணவிகள் பங்கேற்றுள்ளனா். வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜன. 24, 25) நடைபெறும் ஆடவருக்கான 47 பிரிவு போட்டிகளில் 2,063 மாணவா்கள் பங்கேற்கின்றனா்.

தொடக்க விழாவில், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.சிவகுமாா், மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) முத்துராஜ், தமிழ்நாடு நீா்நிலை விளையாட்டுக் கழக தலைவா் திருமாறன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.