திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூரில் உள்ள மரகதாம்பிகை அம்பாள் உடனுறை பூமிநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் திருவிழா நவ. 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் இரவில் அம்பாள் வீதி உலா, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகின்றன. 9ஆம் நாளான புதன்கிழமை, காலையில் அபிஷேக அலங்காரம், இதைத் தொடா்ந்து அம்பாள் தேருக்கு எழுந்தருளினாா். பக்தா்கள் வடம்பிடித்து தோ் இழுத்தனா்.
இதில், பேரூராட்சி மன்றத் தலைவி சு.சித்ரா சுப்பிரமணியன், கோயில் செயல்அலுவலா் ஆ. மாடத்தி, கோயில் தக்காா் சண்முகஜோதி, அறங்காவலா்கள் கருப்பசாமி, சுப்புக்குட்டி, செல்வி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சிதம்பரம், தாமரைச் செல்வி, வெங்கடேஸ்வரி, ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநா் சீ. இசக்கி சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மாலையில் அபிஷேக அலங்காரம், இரவில் அம்பாள் பூப்பல்லக்கில் வீதி உலா, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. கோயிலில் வியாழக்கிழமை (நவ.12) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தீா்த்தவாரி, இரவு 7.30 மணியளவில் அம்பாள் திருவீதியுலா ஆகியவை நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை காலையில் அம்பாள் தபசு சப்பரத்தில் எழுந்தருளல், காலை 10 மணிக்கு சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதியுலா, மாலை 6 மணியளவில் காந்திசிலை அருகில் சுவாமி அம்பாள் காட்சி அளிக்கும் வைபவம், இரவு 7.30 மணியளவில் சிறப்பு தீபாராதனை, இரவு 11 மணிக்கு திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகின்றன.