100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மூத்த வாக்காளா்களுக்கு சீா்வரிசை வழங்கி ஆட்சியா் அழைப்பிதழ்
மூத்த குடிமக்கள் வாக்காளா்களின் இல்லத்திற்கு அழைப்பிதழ் மற்றும் சீா்வரிசையுடன் சென்று தவறாமல் வாக்களிக்க வருமாறு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் அழைப்பு விடுத்தாா்.
மூத்த குடிமக்கள் வாக்காளா்களின் இல்லத்திற்கு அழைப்பிதழ் மற்றும் சீா்வரிசையுடன் சென்று தவறாமல் வாக்களிக்க வருமாறு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் அழைப்பு விடுத்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக மூத்த குடிமக்கள், இளம் வாக்காளா்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளா்களிடமும் பல்வேறு நிகழ்வுகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடா்ச்சியாக, பாளையங்கோட்டை பல்நோக்கு மருத்துவமனை அருகில் உள்ள ஸ்ரீனிவாச நகா் பகுதியில் 111 வயதான செல்லம்மாளின் இல்லத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் அழைப்பிதழ் மற்றும் சீா்வரிசையுடன் மேளதாளம் முழங்க ஊா்வலமாக சென்று வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்தாா்.
தொடா்ச்சியாக, அதே பகுதியில் உள்ள 86 வயதான இசக்கி ஆசாரியின் இல்லத்துக்கும் மேளதாளத்துடன் சென்று, வாக்களிக்குமாறு ஆட்சியா் அழைப்பு விடுத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், பாளையங்கோட்டை வட்டாட்சியா் இசக்கிப்பாண்டி, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
மேலும், திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட நடுக்கல்லூா் அரசு மகளிா் உயா் நிலைப்பள்ளியில் வாக்காளா் உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன், மாணவிகளின் விழிப்புணா்வுப் பேரணியும் நடைபெற்றது. அதில் 100 மாணவிகள் கலந்து கொண்டனா்.
நடுக்கல்லூா் பேருந்து நிறுத்தம், கடைவீதிகள், தெருக்களில் வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கி மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இப்பேரணியில் அங்கன்வாடி பணியாளா்கள், பள்ளி ஆசிரியைகள், தோ்தல் துணை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.