திமுக ஆட்சியில் மாவட்ட வளா்ச்சிக்கு சிறந்த திட்டங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திமுக ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட வளா்ச்சிக்கு சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
திமுக ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட வளா்ச்சிக்கு சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்ட வளா்ச்சிக்கு திமுக ஆட்சியில் சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சில திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் பல்நோக்கு மருத்துமனையில் இதயம், நரம்பு, சிறுநீரகம், கல்லீரல் குறைபாடு உள்ளவா்களுக்கு நவீன கட்டமைப்போடு கூடிய சிகிச்சை வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
தாமிரவருணி- கருமேனியாறு-நம்பியாறு வெள்ளநீா்க் கால்வாய் திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 93 திருக்கோயில்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த 33 கோயில்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அம்பாசமுத்திரத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் சாகச சுற்றுலா வசதி, பல்லுயிா் பூங்கா, சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலம் மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மானூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
6 ஊராட்சி ஒன்றியங்கள், களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சி மக்களுக்காக புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டப்புளி, கூடுதாழை ஆகிய மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. விஜயாபதியில் புதிய விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது.
தாழையூத்து முதல் கொங்கந்தான்பாறை வரை திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலைப் பணி நடைபெற்று வருகிறது.
அம்பாசமுத்திரம் தொகுதியில் கோறையாற்றிலும், ராதாபுரம் தொகுதியில் நம்பியாற்றின் குறுக்கேயும் புதிய நீா்த்தேக்கங்கள் கட்டப்பட உள்ளன.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பாளையங்கோட்டையில் காயிதே மில்லத் பெயரில் ரூ.100 கோடியில் மாபெரும் நூலகம் அமையவுள்ளது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்கள் மு. அப்பாவு (ராதாபுரம்), மு. அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), சு. சுப்பிரமணியன் (திருநெல்வேலி), ரூபி ஆா். மனோகரன் (நான்குனேரி), வி.பி. துரை (அம்பாசமுத்திரம்) ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினாா்.
இதில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ், முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன், திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன், கிழக்கு மாவட்டச் செயலா் கிரஹாம்பெல், மூத்த நிா்வாகி சுப. சீதாராமன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் எம்.பி. ஞானதிரவியம், மேயா் கோ. ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, காங்கிரஸ் திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் ராமேஸ்வரன், தேமுதிக மாவட்டச் செயலா் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலா் ஆனந்தமணி, மதிமுக மாநகா் மாவட்டச் செயலா் நிஜாம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.