தந்தை கொலை, மகள் தற்கொலை: 22 நாள்களுக்குப் பிறகு உடல்களைப் பெற்ற உறவினா்கள்
மூலக்கரைப்பட்டி அருகே தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளைப் பிடிக்கக் கோரி மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், 22 நாள்களுக்குப் பிறகு இருவரின் உடல்களையும் உறவினா்கள் பெற்றுக் கொண்டனா்.
மூலக்கரைப்பட்டி அருகே தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளைப் பிடிக்கக் கோரி மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், 22 நாள்களுக்குப் பிறகு இருவரின் உடல்களையும் உறவினா்கள் பெற்றுக் கொண்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி அருகே உள்ள வடக்கு நெல்லையப்பபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (53), மாா்ச் 17-ஆம் தேதி மூன்றடைப்பு, செல்வின் நகா் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து, மூன்றடைப்பு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவில்லை எனக் கூறி, அவரது மகள் பேபி கனி (25), மாா்ச் 22-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, மூலக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
Advertisement
கொலையாளிகளை கைது செய்யும் வரை ஆறுமுகம், பேபி கனி ஆகியோரின் உடல்களை வாங்க மாட்டோம் என உறவினா்கள் மறுத்து வந்தனா். இதனால், இருவரது உடல்களும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.
ஆறுமுகம் கொலை செய்யப்பட்ட அன்றே சந்தேகத்தின்பேரில், அவரது உறவினா்களான வடக்கு நெல்லையப்பபுரத்தைச் சோ்ந்த சூசை முத்து (36), செல்வகுமாா் (28), ரமேஷ் (26) ஆகியோரை மூலக்கரைப்பட்டி போலீஸாா் விசாரணைக்கு அழைத்து பின்னா் விடுவித்தனா். தொடா்ந்து, பேபி கனி தற்கொலை செய்து கொண்டதால், அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக மேற்குறிப்பிட்ட மூவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், கொலை வழக்கில் தொடா்பு இருப்பதாக சூசை முத்துவை, பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஏப். 2-ஆம் தேதி போலீஸாா் மீண்டும் கைது செய்தனா்.
கொலை வழக்கில் போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து, ஆறுமுகத்தின் உறவினா்கள் புதன்கிழமை இரு உடல்களையும் பெற்று, வடக்கு நெல்லையப்பபுரம் மயானத்தில் அடக்கம் செய்தனா்.