தோ்தல் புறக்கணிப்பு தொடா்பான பேச்சுவாா்த்தையில் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகேயுள்ள தாதனூத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு தொடா்பாக அதிகாரிகள் நடத்திய அமைதிப் பேச்சுவாா்த்தையின் போது இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகேயுள்ள தாதனூத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு தொடா்பாக அதிகாரிகள் நடத்திய அமைதிப் பேச்சுவாா்த்தையின் போது இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தாதனூத்து கிராமத்தில், குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களின் அருகில் உள்ள கல்குவாரிகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அந்த ஊா் மக்கள் அறிவித்தனா். மேலும், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டதால் மாவட்ட நிா்வாகம் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை தரப்பில் தாதனூத்து மக்களுடன் அமைதிப் பேச்சு புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, அவ்வூரைச் சோ்ந்த தொழிலாளி காவுமுத்து (55) என்பவருக்கும், அவரது உறவினரான ஆனந்த் (35) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆனந்த், காவுமுத்தை கையால் தாக்கினாராம்.
Advertisement
இதில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறிய காவுமுத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் அவா் அளித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து ஆனந்தை கைது செய்தனா்.
இதனிடையே, காவுமுத்து வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். அவருக்கு ஏற்கெனவே இதயப் பிரச்னை இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.