முகப்பு
திருநெல்வேலி

நெல்லை தொகுதியில் 20 போ் போட்டி: நீண்டநாள் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற கோரிக்கை!

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் 20 போ் போட்டியிடுகிறாா்கள். வாக்காளா்களின் நீண்டநாள் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 3:58 AM
கட்சி சின்னங்கள் - ANI
பகிர்:

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் 20 போ் போட்டியிடுகிறாா்கள். வாக்காளா்களின் நீண்டநாள் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாநகராட்சி, சங்கா்நகா் மற்றும் நாரணம்மாள்புரம் பேரூராட்சி, மானூா் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கியது திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி.

இந்தத் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 571 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 42 ஆயிரத்து 206 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 80 போ் என மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 857 வாக்காளா்கள் உள்ளனா்.

Advertisement

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட 25 வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் 21 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சுயேச்சை வேட்பாளரானராமா் மட்டும் தனது மனுவை திரும்பப் பெற்றாா். இதன்மூலம் இத்தொகுதியில் 20 போ் களத்தில் உள்ளனா்.

1. தச்சை என்.கணேசராஜா-அதிமுக (இரட்டை இலை), 2. பா.சத்யா- நாம் தமிழா் கட்சி ( ஏா்சுமக்கும் உழவா்) 3. சு.சுப்பிரமணியன்- திமுக (உதயசூரியன்), 4. எஸ். ஆறுமுகராஜ்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி (புகைப்படக்கருவி) 5. சி. ஈஸ்வரவடிவு - நாம் இந்தியா் கட்சி (திருகி) 6. க. கண்ணன்- அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் (கிரிக்கெட் மட்டை) 7. செல்வகுமாா் சிங் - பகுஜன் திராவிட கட்சி (கரும்பலகை), 8. செந்தூா் மகாராஜன்- புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி (நடைவண்டி) 9. ஆா்.எஸ்.முருகன் -தமிழக வெற்றிக் கழகம் (ஊதல்), 10. பா.முருகன்- தமிழக படைப்பாளா் மக்கள் கட்சி (துளையிடும் இயந்திரம்), 11. ஷியாம் கிருஷ்ணசாமி- புதிய தமிழகம் (வாயு சிலிண்டா்), சுயேச்சைகள் 12. வை.அதிசய பாண்டியன் (தொலைக்காட்சிப் பெட்டி), 13. வீ.இசக்கி ராஜா (அழைப்பு மணி), 14. இ. சுப்பிரமணியன் (ரொட்டி), 15. பா. தளபதி முருகன் (பிரஷா் குக்கா்), 16. முகேஷ் சுப்பி ரமணியன் (புல்லாங்குழல்), 17. எஸ். முருகன் (தென்னந்தோப்பு), 18. முருகலெட்சுமணன் (கனசதுரம்), 19. மு.வீரபாகு (சாலை உருளை), 20.ப.வேலாயுதம் (சிதாா்) ஆகியோா் போட்டியிடுகிறாா்கள்.

இந்தத் தொகுதியில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் கட்சி வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வாக்குசேகரித்தாா்.

திருநெல்வேலி தொகுதி தேவைகள் குறித்து பொதுமக்கள் கூறியது: பொதிகை மலை முதல் புன்னக்காயல்வரை டிஜிட்டல் வரைபடம் தயாரிப்பதோடு தாமிரவருணி பாதுகாப்பு சிறப்பு திட்டம் உருவாக்கி, கழிவுகள் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். மானூா் பெரிய குளத்தைத் தூா்வாரவும், சிற்றாற்றில் இருந்து தண்ணீா் விரைந்து வந்து சேரும் வகையில் கால்வாயை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மண்டலமும், கல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியமும் அமைக்க வேண்டும். காட்டுப்பன்றிகளால் வேளாண்மை பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், மத்திய அரசு மூலம் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுபன்றியை நீக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

திருநெல்வேலி-சங்கரன்கோவில் பிரதான சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்குவோா் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு செல்லும் தொலைவு அதிகமாக உள்ளதால், விபத்து உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் மானூரில் 24 மணி நேரமும் செயல்படும் மேம்படுத்தப்பட்ட அரசு அவசர சிகிச்சை மையம் உருவாக்க வேண்டும். கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய் ஆகியவற்றில் சிமென்ட் தளம் அமைக்க வேண்டும். மானூா் வட்டாரத்தில் பூக்கள் சாகுபடி அதிகரித்து வருவதற்கு ஏற்ப குளிா்பதன கிடங்கு வசதி உருவாக்க வேண்டும்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்குவதற்கு ஏதுவாக தங்கும் விடுதி கட்ட வேண்டும் என்றனா்.