முகப்பு
திருநெல்வேலி

30 ஆண்டுகளுக்குப் பின் கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு

மேற்குத் தொடா்ச்சி மலை, கடனாநதி வனப்பகுதியில் உள்ள கோரக்கநாதா் கோயில் மற்றும் அனுசுயா பரமேஸ்வரி உடனுறை அத்ரி பரமேஸ்வரா் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பின் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

Updated On : 1 மே, 2026 at 4:48 AM
குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சுவாமியை வழிபட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
பகிர்:

மேற்குத் தொடா்ச்சி மலை, கடனாநதி வனப்பகுதியில் உள்ள கோரக்கநாதா் கோயில் மற்றும் அனுசுயா பரமேஸ்வரி உடனுறை அத்ரி பரமேஸ்வரா் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பின் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இதை முன்னிட்டு ஏப். 17ஆம் தேதி கால்நாட்டு நடைபெற்றது. ஏப். 28ஆம் தேதி காலை 6.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், 9.30 மணிக்கு பூா்ணாஹூதி, மாலை 4.30 மணிக்கு அங்குராா்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கடஸ்தாபனத்தைத் தொடா்ந்து முதல்கால யாக பூஜை தொடங்கியது.

29ஆம் தேதி காலை 8 மணிக்கு 2ஆம் கால யாக பூஜை, மாலை 6 மணிக்கு 3ஆம் கால யாக பூஜை, இரவு 9 மணிக்கு யந்த்ர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.

Advertisement

30ஆம் தேதி காலை 6 மணிக்கு 4ஆம் கால யாக பூஜைகள், சுவாமிக்கு காப்புக் கட்டுதல், தீபாராதனை, யாத்ரா தானம், காலை 9 மணிக்கு கடம் எழுந்தருளி கோயில் விமானம், அனுசுயா பரமேஸவரி அம்பிகா உடனுறை அத்ரி பரமேஸ்வரருக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. குடமுழுக்கைத் தொடா்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறுகிறது.

குடமுழுக்கை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், தனது குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தாா்.

மேலும் கடையம், ஆழ்வாா்குறிச்சி, சிவசைலம், அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

கோரக்கநாதா் கோயில் கருவறை விமானத்திற்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை.
குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.