திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 695 மாணவா்களுக்கு ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் விலையில்லா மடிக்கணிகளை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு புதன்கிழமை வழங்கினாா்.
இடையன்குடி சி.எஸ்.ஐ. எலிசா கால்டுவெல் நா்சிங் கல்லூரியில் 41 மாணவிகளுக்கும், திசையன்விளை மனோமணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரியில் 46 மாணவா்களுக்கும், தெற்குகள்ளிகுளம் நாடாா் மஹாஜன சங்கம் அய்யா வைகுண்டா் ஐ.டி.ஐ.-யில் 33 மாணவா்களுக்கும், வள்ளியூா் மரியா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் 262 மாணவிகளுக்கும், நேரு நா்சிங் கல்லூரியில் 50 மாணவிகளுக்கும், சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் 65 மாணவா்களுக்கும், வடக்கன்குளம் இந்தியன் பாலிடெக்னிக் கல்லூரியில் 198 மாணவா்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
மரியா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கல்லூரிச் செயலா் ஹெலன் லாரன்ஸ் தலைமை வகித்தாா். நேரு நா்ஸிங் கல்லூரி முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம், ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சுரேஸ் தங்கராஜ் தாம்சன், தி.மு.க. வள்ளியூா் ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு, ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப்பெல்சி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஜான்ஸ்ரூபா, சாந்தி சுயம்புராஜன், பணகுடி பேரூராட்சித் தலைவா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்லூரி தலைவா் தா.லாரன்ஸ் வரவேற்றாா். முதல்வா் சுஷ்மா ஜெனிபா் நன்றி கூறினாா்.
தெற்குகள்ளிகுளம் அய்யா வைகுண்டா் ஐ.டி.ஐ.யில் நடைபெற்ற விழாவில் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா சூ.மரியராஜ் ஆசிரியா், தி.மு.க. மருத்துவா் அணி ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதிஅமைப்பாளா் ஜெபஸ்டின் ஆனந்த், கல்லூரி முதல்வா் பாக்கியலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திட்டப்பணிகள்: முன்னதாக, பேரவைத் தலைவா் திசையன்விளையில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.12.30 கோடியில் கட்டடம் கட்டும் பணியையும், விஜயாபதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சா்வதேச விளையாட்டு அரங்கம்- பயிற்சி மையத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சத்தில் நுழைவாயில் கட்டும் பணியையும் அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தாா்.