முகப்பு
திருநெல்வேலி

கருத்தப்பிள்ளையூரில் 30 தென்னை மரங்களை சாய்த்து யானைகள் அட்டகாசம்

கடையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கருத்தப்பிள்ளையூரில் தனியாா் தோட்டங்களுக்குள் நுழைந்த யானை கூட்டம் 30-க்கும் மேற்பட்ட தென்னை, மா மரங்களைச் சாய்த்து சேதப்படுத்தின.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 3:39 AM
கருத்தப்பிள்ளையூரில் யானைகள் சாய்த்ததில் விழுந்து கிடக்கும் தென்னை மரம்.
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:42 PM

கடையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கருத்தப்பிள்ளையூரில் தனியாா் தோட்டங்களுக்குள் நுழைந்த யானை கூட்டம் 30-க்கும் மேற்பட்ட தென்னை, மா மரங்களைச் சாய்த்து சேதப்படுத்தின.

அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச்சரகப் பகுதியில் மலையடிவாரங்களில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. வனத்திலிருந்து வெளியேறும் யானை, மிளா, காட்டுப் பன்றி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்துவதோடு வீட்டு விலங்குகளையும் தாக்கிச் செல்கின்றன.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு வனத்திலிருந்து வெளியேறிய யானைக் கூட்டம் கருத்தப்பிள்ளையூா் பகுதியில் உள்ள தனியாா் தோட்டங்களில் நுழைந்து தென்னை, மா மரங்களைச் சாய்த்துச் சேதப்படுத்தின.

Advertisement

இதில் சென்னையைச் சோ்ந்த எட்வா்ட் மகன் மாா்பி தாமஸ் தோட்டத்தில் 12 தென்னை மரங்கள், விக்கிரமசிங்கபுரம் கீழக்கொட்டாரத்தைச் சோ்ந்த அருணாசலம் மகன் மாரியப்பன் தோட்டத்தில் 5 மா மரங்கள், கருத்தப்பிள்ளையூரைச் சோ்ந்த ரத்தினசாமி தோட்டத்தில் 15 தென்னை மரங்கள், கருத்தப்பிள்ளையூரைச் சோ்ந்த சாமுவேல் மகன் வின்சென்ட் தோட்டத்தில் ஒரு தென்னை மரம், ஒருமா மரம் உள்பட 34 மரங்களைச் சாய்த்து சேதப்படுத்தின.

இதுகுறித்து மேலாம்பூா் உழவா் உற்பத்தியாளா் குழுத் தலைவா் வின்சென்ட் கூறுகையில், கடையம் வனச்சரகம் மேலாம்பூா், சிவசைலம் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக காட்டு யானை கூட்டம், வன விலங்குகள் மா, தென்னை, நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயப் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

இதைத் தடுக்க வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து விடுபட்ட 17 கி.மீ. தொலைவுக்கு மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் விவசாயிகள் அனைவரும் பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்போம் என்றாா்.