யானைகளால் தென்னை மரங்கள் சேதம்
உடுமலை அருகே மலையடிவார கிராமத்துக்குள் புகுந்த யானைகள் அங்குள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள்
உடுமலை: உடுமலை அருகே மலையடிவார கிராமத்துக்குள் புகுந்த யானைகள் அங்குள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் ஜல்லிபட்டி உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களை ஒட்டிள்ள பகுதிகளில் தென்னை, மா, பாக்கு மரங்களை விவசாயிகள் வளா்த்து வருகின்றனா். கடந்த சில நாள்களாக வனப் பகுதியில் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால், தண்ணீா் குடிக்க அமராவதி, திருமூா்த்தி அணைகளுக்கு யானைகள் வருகின்றன. அப்போது யானைக் கூட்டம் வழிமாறி கிராமங்களுக்குள் புகுந்துவிடுகின்றன.
இந்நிலையில் அங்குள்ள தென்னந்தோப்புகளுக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த யானைக் கூட்டம் தென்னை மரங்களை சேதப்படுத்தின. இதனால் அங்குள்ள விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா். மேலும் பகல் நேரங்களிலும் அப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் கிராமத்துக்குள் புகாதவாறு வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்று உடுமலை வனச் சரக அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
இது குறித்து வனத் துறையினா் கூறும்போது, ‘கிராமங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்திவரும் யானைகளை விரட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடா்ந்த வனப் பகுதிக்குள் யானைகளை விரட்டவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.