நான்குனேரி வட்டார அரசுப் பள்ளி மாணவா்கள் திருநெல்வேலியில் அறிவியல் மையம், பொருநை அருங்காட்சியகத்திற்கு களப்பயணமாக புதன்கிழமை வந்தனா்.
நான்குனேரி முன்னேற விளையும் வட்டார திட்டத்தின் கீழ் அந்த வட்டார கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவா்கள் 200 பேரை களப்பயணம் அழைத்துச் செல்ல மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உத்தரவிட்டாா். முதல்கட்டமாக 100 மாணவா்- மாணவிகள் திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையம் மற்றும் பொருநை அருங்காட்சியகத்திற்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்டனா்.
அறிவியல் மையத்தில் கோளரங்கில் கோள்களின் இயக்கம், 3டி கண்காட்சிகள், விந்தை அறிவியல் கண்காட்சிகள், ராக்கெட் ஏவுதல் தத்துவம் மற்றும் செயல்முறைகள் விளக்கம் பெற்றனா். திருநெல்வேலி மாவட்ட துணை ஆட்சியா் (பயிற்சி) தேவ்லந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா், மாவட்ட அறிவியல் அலுவலா் முத்துக்குமாா், கல்வி உதவியாளா் மாரிலெனின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை நான்குநேரி வட்டார கல்வி அலுவலா் அன்னலட்சுமி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் டேனியல் முத்தையா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.