தூத்துக்குடி

ஓராண்டாகியும் சீரமைக்கப்படாத வெள்ளம் பாதித்த பகுதிகள்: மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துமா?

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது நிகழ்ந்த பாதிப்புகளில் சில இடங்கள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தி. இன்பராஜ்

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது நிகழ்ந்த பாதிப்புகளில் சில இடங்கள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது நவம்பர் மாதம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. குறிப்பாக, தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் உள்ள அந்தோணியார்புரம் பகுதி அதிகளவில் பாதிக்கப்பட்டது.
வெள்ளத்தின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும், தூத்துக்குடி- திருநெல்வேலி இடையே பல மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
காட்டாற்று வெள்ளத்தால் மறவன்மடம், அந்தோணியார்புரம், சீனிவாச நகர், கோரம்பள்ளம், அய்யனடைப்பு, சோரீஸ்புரம், ஸ்ரீசித்தர் நகர், மாதவன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகள், உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
மழைவெள்ள பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு நிறைவடையும் தருவாயில், தற்போதுவரை மீண்டும் வெள்ளப் பாதிப்பு ஏற்படாதவண்ணம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோரம்பள்ளம் இசக்கியம்மன் கோயில் பகுதியிலிருந்து பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சீராக செல்வதற்கான பக்கிள் ஓடையை பலரும் சிறுசிறு பாலங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.
அகலமான பக்கிள்ஓடை ஆக்கிரமிப்புகளால் மிகவும் குறுகி இருப்பதால் மழைக்காலங்களில் வெள்ளநீர் முறையாக செல்ல இயலாமல் மீண்டும் குடியிருப்புகளுக்குள் புகுந்திடும் அபாய நிலையே தற்போதும் தொடர்கிறது.
இன்னும் சில நாள்களில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இது இப்பகுதி மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக புதுக்கோட்டை காட்டாற்று பகுதியிலிருந்து தூத்துக்குடி 3 ஆம் மைல் வரையுள்ள பக்கிள் ஓடையின் ஆக்கிரமிப்புகளை துரிதமாக அகற்ற வேண்டும் என்றும், தண்ணீர் சீராக செல்வதற்கு ஏற்ப ஆழப்படுத்தி மணல்மேடுகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து தூத்துக்குடி ஒன்றிய தேமுதிக செயலர் செந்தில்குமார் கூறியது:
கடந்த ஆண்டு காட்டாற்று வெள்ளம் பாதிப்பால் மறவன்மடம் பகுதி மற்றும் அந்தோணியார்புரம் பகுதியில் தூத்துக்குடி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலைகளில் ஆங்காங்கே சேதமானது. இந்த சேதமான பகுதிகள் தற்போதுவரை சரிசெய்யப்படாமல் இருப்பது விபத்துகளுக்கு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. எனவே மழைவெள்ளத்தால் அரிக்கப்பட்டு சேதமான இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.  
நிகழாண்டு மழைவெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில், உரிய தடுப்பு நடவடிக்கைகளை காலதாமதமின்றி துரிதமாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையே, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தோணியார்புரம் பகுதியில் 11 இடங்களில் சிறிய வகையிலான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மழையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆட்சியர் அலுவலகம் அருகே ஆபத்தான பள்ளம்...
தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மேம்பாலத்தின் கீழே ஆபத்தான நிலையில் ஒரு பள்ளம் காணப்படுகிறது. சுமார் 20 அடி சுற்றளவில் காணப்படும் இப்பள்ளத்தில் தற்போது தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் இந்த சாலையின் வழியே செல்வதால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் இப்பள்ளத்தை கடந்து செல்வது ஆபத்தானதாக இருந்து வருகிறது.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விமான நிலையத்துக்குச் செல்லும் அரசியல் பிரமுகர்கள் கடந்து செல்லும் பாதையில் உள்ள இந்த ஆபத்தான பள்ளத்தை நிரப்பி, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT