பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்: நாலாட்டின்புத்தூர் காவல் நிலையம் முற்றுகை
வானரமுட்டி காவல் நிலையத்திற்கு அருகேயுள்ள காலியிடத்தில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் உள்பட சிலரை தாக்கியதாக
வானரமுட்டி காவல் நிலையத்திற்கு அருகேயுள்ள காலியிடத்தில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் உள்பட சிலரை தாக்கியதாக காவல் துறை அதிகாரியை கண்டித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வானரமுட்டி பூமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கெண்டியார்சாமி மகன் கருப்பசாமி, உள்ளிட்ட சிலர் காவல் நிலையத்திற்கு அருகேயுள்ள காலியிடத்தில் வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனராம். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், அங்கு விளையாடக் கூடாது என்று மிரட்டினாராம். பின்னர் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தாராம். அதையடுத்து அங்கு சென்ற போலீஸார் விளையாடிக் கொண்டிருந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும், இதில் கருப்பசாமி உள்ளிட்ட மூவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மூவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, வானரமுட்டி பகுதி பொதுமக்கள் மற்றும் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கத் தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு திரண்டனர். தகவல் தெரிந்தவுடன் டி.எஸ்.பி. ஜெபராஜ், கயத்தாறு காவல்ஆய்வாளர் ஆவுடையப்பன் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு மருத்துவமனை வளாகத்திலிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரை காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
இதையடுத்து, டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் ஜூடி (நாலாட்டின்புத்தூர்), முத்துலட்சுமி (கழுகுமலை) ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் புகார் மனு பெறப்பட்டதும், அதற்கான ரசீது வழங்கப்பட்டதையடுத்து காலை 11 மணிக்கு தொடங்கிய முற்றுகைப் போராட்டம் பிற்பகல் 1 மணிக்கு முடிவுக்கு வந்தது.