தூத்துக்குடி அருகே 40 டன் கோதுமையுடன் தீப்பிடித்து எரிந்த லாரி
தூத்துக்குடி அருகே திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததால் லாரியும் அதில் இருந்த 40 டன் கோதுமையும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி அருகே திடீரென லாரி தீப்பிடித்து எரிந்ததால் லாரியும் அதில் இருந்த 40 டன் கோதுமையும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடியில் உள்ள தனியார் கிடங்கில் இருந்து சுமார் 40 டன் கோதுமை மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று அருப்புக்கோட்டைக்கு புதன்கிழமை புறப்பட்டது. லாரியை தூத்துக்குடி 3ஆவது மைல் பகுதியைச் சேர்ந்த முருகன் (34) ஓட்டிச் சென்றார்.
தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குசாலை பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது, முன்பக்க சக்கரம் வெடித்து தீப்பற்றியதாம். இதையடுத்து, லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பிவிட்டார். இதையடுத்து, தூத்துக்குடியில் இருந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீயை அணைத்தனர். இருப்பினும், லாரியும், லாரியில் இருந்த 40 டன் கோதுமையும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.