முகப்பு
தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெண்கள் நூதனப் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கிராமப் பெண்கள் புதன்கிழமை முட்டிப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 29 மார்ச், 2018 at 7:28 AM
பகிர்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கிராமப் பெண்கள் புதன்கிழமை முட்டிப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, கல்லூரி மாணவர்கள், விவசாயிகளும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த ஆலையை மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலை அருகேயுள்ள அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
45ஆவது நாளான புதன்கிழமை, குமரெட்டியாபுரம் பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் தாங்கள் போராட்டம் நடத்திவரும் பகுதியில், தரையில் முட்டிப்போட்டு, முழக்கமிட்டனர். இந்த நூதனப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவர்கள்: தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் 3ஆவது நாளாக புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அங்கன்வாடிக்கு பூட்டு: தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் நடத்தப்படும் அங்கன்வாடிப் பள்ளிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் குழந்தைகளை அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துக் கொள்வதாகக் கூறி பெற்றோர் அழைத்துச் சென்றனர். இதையடுத்து, விவசாயிகளும் பொதுமக்களும் கதவை மூடி பூட்டுப்போட்டுச் சென்றனர்.
கையெழுத்து இயக்கம்: தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில்,  ஏராளமானோர் கையெழுத்திட்டனர். இதையடுத்து, கையெழுத்துகள் அடங்கிய மனுவை மாவட்டச் செயலர் ஹென்றி தாமஸ், முன்னாள் மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் உள்ளிட்டோர் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.