மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் ஆதித் தமிழர் பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம்
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் ஆதித் தமிழர் பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது ஆட்சியர் என். வெங்கடேஷிடம் ஸ்ரீவைகுண்டம் அருந்ததியர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆதித்தமிழர் கட்சியினர் அளித்த மனு விவரம்:
ஸ்ரீவைகுண்டம் மின்வாரிய அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்த அருந்ததியர் காலனியை சேர்ந்த பேச்சிமுத்து (32) கடந்த 18ஆம் தேதி வெள்ளூரில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிக்காக மின்கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழந்த பேச்சிமுத்துவின் மரணத்திற்கு காரணமான மின்வாரிய அதிகாரிகளை கைது செய்ய வேண்டும், பேச்சிமுத்துவின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய வீடுகள் கட்டித் தர கோரிக்கை: தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் பகுதி மீனவர்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: வேம்பாரில் உள்ள ஏழை, எளிய மீனவர்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2003ஆம் ஆண்டு மீனவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்த வீடுகளை கடந்த 2003, செப்டம்பர் 29ஆம் தேதி மீன்வளத் துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட மீனவர்களிடம் ஒப்படைத்தனர். மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் சில ஆண்டுகளுக்குள்ளே சேதமாகி மேற்கூரைகள் இடிந்து விழுந்து வெறும் கம்பிகளுடன் காட்சி அளித்து வருகின்றன. பழுதான வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை தாமதமின்றி கட்டித் தர நடவடிகை எடுக்க வேண்டும்.
சாலை வசதி கோரி மனு: தூத்துக்குடி தெய்வச்செயல்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அக்ரி எஸ். பரமசிவன் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: விளாத்திகுளம் வட்டம், நாகலாபுரம் அருகேயுள்ள ரெட்டியாபட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நாகலாபுரம் முதல் காடல்குடி வரையிலான மாநில நெடுஞ்சாலையில் ரெட்டியாபட்டி கிராமம் வரை உள்ள 1.5 கிலோமீட்டர் சாலை மிகவும் மோசமான முறையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், ஆன்மிக ஆர்வலர்கள், மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில்கொண்டு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத அந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.