தூத்துக்குடி

நீர்நிலைகளை ஆக்கிரமித்து உயர் அழுத்த மின் பாதை அமைக்கும்  காற்றாலை நிறுவனங்கள்!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், தட்டப்பாறை, வடக்கு இலந்தைகுளம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில்

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், தட்டப்பாறை, வடக்கு இலந்தைகுளம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் சார்பில் காற்றாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உயர் அழுத்த மின்சாரத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் மின் கம்பங்கள் விவசாய நிலங்களிலும், நீர்நிலைகளிலும் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
காட்டுப் பகுதியில் நீர்நிலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின் கம்பங்கள் காட்டாற்று வெள்ளத்தின்போது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதுபோன்ற சூழலில் மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஒட்டப்பிடாரம் அருகே லட்சுமிபுரத்தில் இருந்து சில்லாநத்தம் செல்லும் பொதுப்பாதையின் குறுக்கே சிந்தலக்கட்டை பாதை வரை உள்ள ஓடையின் நடுவில் தனியார் காற்றாலையின் உயர் அழுத்த மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, அந்தப் பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டிவரும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச் சங்க செயலர் ரெ. சுந்தரராஜ் கூறியது:
தூத்துக்குடி அருகேயுள்ள மேலத்தட்டப்பாறை கிராமத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தால் காற்றாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காற்றாலைகள் அமைக்கும் இடத்திற்கு செல்ல ஊராட்சி ஒன்றிய சாலைகளான மேலத்தட்டப்பாறை - உமரிக்கோட்டை சாலை, மேலத்தட்டப்பாறை - பேரூரணி சாலை, மேலத்தட்டப்பாறை - கல்லம்பரும்பு சாலை, மேலத்தட்டப்பாறை - வடக்குசிலுக்கன்பட்டி சாலை ஓரங்களில் உள்ள ஓடைகளை ஆக்கிரமித்து பாதை அமைத்துள்ளனர்.
மேலும், வடக்குசிலுக்கன்பட்டி கிராமத்தில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்ல தூத்துக்குடி கோட்ட நெடுஞ்சாலை துறைக்கு உள்பட்ட ஒட்டப்பிடாரம் - புதுக்கோட்டை சாலை, மேலத்தட்டப்பாறை - வடக்குசிலுக்கன்பட்டி சாலையோரங்களில் உயர் அழுத்த மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
மேலத்தட்டப்பாறை கிராமத்தில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்ல நடப்படும் மின் கம்பங்கள், தனியார் விவசாய நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு புறம்போக்கு ஓடை மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலை ஓரங்களில் நடப்பட்டுவருகின்றன. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியது: கயத்தாறு, கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் பகுதிகளில் சில இடங்களில் விதிமுறைகளை மீறி எந்தவித அனுமதியுமின்றி நடப்பட்ட மின்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. எந்த நிறுவனமாக இருந்தாலும், உரிய அனுமதியின்றி மின்கம்பங்களை நட்டால், அவர்கள் மீது உடனடியாக சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT