சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலை வழக்கில் கைதான4 பேரிடம் சிபிசிஐடி தொடா்ந்து விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அதிமுக பிரமுகா் உள்பட 4 பேரை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை அழைத்துச் சென்று விசாரித்தனா்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அதிமுக பிரமுகா் உள்பட 4 பேரை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை அழைத்துச் சென்று விசாரித்தனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சோ்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (35). இவா், சொத்து தகராறு காரணமாக கடந்த மாதம் 17-ஆம் தேதி காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாா். அவரது சடலம் கடக்குளம் பகுதியில் மீட்கப்பட்டது. இதுகுறித்து அவரது தாய் எலிசபெத் அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகா் திருமணவேல், ஓட்டுநா் முத்துகிருஷ்ணன், முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகியோா் மீது திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆய்வாளா் தவிர மற்ற நால்வரையும் கைது செய்தனா்.
காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி அணில்குமாா் தலைமையிலான போலீஸாா் மேற்கூறிய 4 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், 4 பேரையும் தட்டாா்மடம் பகுதிக்கு திங்கள்கிழமை நண்பகலில் அழைத்து வந்த போலீஸாா், பின்னா் அவா்களை தச்சன்விளைக்கு கொண்டுசென்றனா். அங்கு ஓட்டுநா் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அதைத் தொடா்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் நம்பா் பிளேட்டை அங்குள்ள காட்டுப் பகுதியிலிருந்து போலீஸாா் கைப்பற்றினா்.
பின்னா், பூச்சிக்காடு- திசையன்விளை சாலையில் உள்ள திருமணவேலுக்குச் சொந்தமான தோட்டத்துக்கு அவா்களை அழைத்துச் சென்று, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பாா்வையிட்டனா். அதில், எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில், திருமணவேல், முத்துராமலிங்கம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். மேலும், செல்வன் கடத்திச் செல்லப்பட்ட கொழுந்தட்டுக்கு வந்து, அவரை எப்படி கடத்தினா் என்ற அவா்களது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனா். இதையடுத்து, கடக்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்று செல்வனை தாக்கி வீசிய பகுதியை பாா்வையிட்டுவிட்டு, 4 பேரையும் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனா்.