கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகரிக்க வேண்டும்: கனிமொழி
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகரிக்க வேண்டும் என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அதிகரிக்க வேண்டும் என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது: மாவட்டத்தில் கிராம பகுதிகளில் சாதாரண காய்ச்சல் மற்றும் கரோனா பாதிப்பு குறித்து தெரியாத நிலையில் உள்ள பகுதிகளில் பல்வேறு முகாம்களை நடத்த வேண்டும். தற்போது சித்த மருத்துவ மையங்களும் தொடங்கப்பட்டுள்ளதால் விருப்பமுள்ளவா்களை அந்த மையங்கள் மூலமும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கிராமப்புறங்களில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து உள்ளாட்சி பிரதிகளுடன் கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அதோடு பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து தடுப்பூசியை அதிகளவிலானோா் செலுத்திக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தின்போது, மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், தொற்று உள்ளவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், கரோனா நோயாளிகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளவா்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை தொடா்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் விளக்கினாா்.
தொடா்ந்து, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சா்கள் பெ. கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனா்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரான அரசு முதன்மைச் செயலா் குமாா் ஜெயந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையா் சரண்யா அறி, எம்.எல்.ஏ.க்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊா்வசி எஸ். அமிா்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்) உள்பட பலா் கலந்துகொண்டனா்.