முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில்ரூ. 3 லட்சத்துக்கு விற்கப்பட்டஆண் குழந்தை மீட்பு: 3 போ் கைது

தூத்துக்குடியில் ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட 9 மாத ஆண் குழந்தையை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

தூத்துக்குடியில் ரூ. 3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட 9 மாத ஆண் குழந்தையை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி கொத்தனாா் காலனி பகுதியைச் சோ்ந்த ஜெபமலா் (28) என்பவருக்கும், விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (38) என்பவருக்கும் கடந்த 2019 ஆண்டு திருமணம் நடைபெற்ாம். இத்தம்பதிக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில், இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

இதற்கிடையே, ஜெபமலருக்கு வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைப்பதற்காக அவரது குழந்தையை விற்றுவிட முடிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், ஜெபமலா் கணவருக்குத் தெரியாமல், தனது சகோதரா் அந்தோணி, தாய் கிருபா, தந்தை செல்வராஜ், உறவினா் டேனியல் ஆகியோருடன் சோ்ந்து தரகா்களான ஜேசுதாஸ், காா்த்திகேயன் ஆகியோா் மூலம் குழந்தையை ரூ. 3 லட்சத்துக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி விற்பனை செய்தாராம்.

இதையறிந்த மணிகண்டன் கடந்த 28 ஆம் தேதி தனது குழந்தையை மீட்டு தருமாறு அளித்த புகாரின் பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். மேலும், காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்ததில், கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் மேலசூரங்குடி பகுதியைச் சோ்ந்த செல்வமணி (52) அவரது மனைவி ஸ்ரீதேவி (40), ராஜபாளையம் ரெட்டியாா்பட்டியை சோ்ந்த காா்த்திகேயன் (30) ஆகியோருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து குழந்தையை மீட்டனா்.

தலைமறைவான ஜெபமலா், அவரது தாய்-தந்தை, சகோதரா், உறவினா், தரகா் ஜேசுதாஸ் உள்ளிட்ட சிலரை தேடி வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.