முகப்பு
தூத்துக்குடி

‘வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்றோா், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்றோா், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ம. பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞா்களுக்கு தமிழக அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

9 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ. 200-ம், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 300-ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600- வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

இந்தத் தொகை நேரடியாக மனுதாரா்களது ஆதாா் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புபவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடா்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவா்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000 மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெற தகுதியுடையவா்கள் தங்களது அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் கோரம்பள்ளத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.