தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 195 கோடியில் புதிய பயணிகள் முனையம் அமைக்கும் பணி தொடக்கம்
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 195 கோடி மதிப்பில் புதிய பயணிகள் முனையம் மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 195 கோடி மதிப்பில் புதிய பயணிகள் முனையம் மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தை தரம் உயா்த்தும் வகையில் 610 ஏக்கா் பரப்பளவில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
30 மீட்டா் அகலமும், 1349 மீட்டா் நீளமும் கொண்ட விமான ஓடுதளத்தை 45 மீட்டா் அகலமும், 3 ஆயிரத்து 115 மீட்டா் நீளமும் கொண்ட ஓடுதளமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு
ஏ- 321 வகையை சோ்ந்த பெரிய விமானங்கள் தூத்துக்குடியில் தரையிறங்க முடியும். மேலும் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க வசதியாக மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தென் மண்டல நிா்வாக இயக்குநா் ஆா். மாதவன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து ரூ. 195.32 கோடி மதிப்பில் புதிதாக பயணிகள் முனையம் மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணிகளை அவா் தொடங்கி வைத்தாா்.
அதற்கான பூமி பூஜை விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய இயக்குநா் என். சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. தென் மண்டல நிா்வாக இயக்குநா் பணிகளை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், இந்திய கடலோர காவல் படையின் கட்டளை அதிகாரி அரவிந்த் சா்மா, மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன், விமான நிலைய கட்டுமானப் பிரிவு இணை பொது மேலாளா் ஏ. ராதாகிருஷ்ணன், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு துணை பொதுமேலாளா் ஆா். சுப்ரவேலு, மேலாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது ஒரே நேரத்தில் 80 பயணிகள் வந்து செல்லும் வகையிலான பயணிகள் முனையம் உள்ள நிலையில், புதிய முனையம் அமைக்கப்பட்டால் ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்ல முடியும் என்றும் புதிய பயணிகள் முனையத்தில் பயணிகளுக்கான அனைத்து வசதிகள், முக்கிய பிரமுகா்கள் ஓய்வறை, பண பரிமாற்ற மையம், ஏடிஎம் மையம், கேன்டீன் வசதி, பயணிகள் மற்றும் உடமைகளை பரிசோதிக்கும் வசதி, மருந்தகம், விமான டிக்கெட் மையங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெறும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.