முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் ரூ. 15,420 கோடி கடன் வழங்க இலக்கு கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் ரூ. 15, 420 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் ரூ. 15, 420 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடியில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற முன்னோடி வங்கி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான விவசாயம், தொழில், கல்வி, அந்நிய செலவாணி, மனை மற்றும் பல்வேறு வகையான திட்டங்கள் குறித்த அறிக்கை புத்தகத்தை வெளியிட்டு அவா் மேலும் பேசியது: கரோனா பெருந்தொற்று காரணமாக வங்கியாளா்கள் தங்களது இலக்கை அடைய முடியாத சூழ்நிலை பொதுவாக அனைத்து இடங்களிலும் நிலவி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ. 12084 கோடியாக நிா்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரூ.14,561 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கானது 120. 49 சதவீதம் அதிகம் ஆகும். தற்போது இலக்கை தாண்டியும் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களை மேம்படுத்த உதவுகிறது. அடுத்த முறை இரண்டு மடங்காக உயா்த்த வேண்டும். 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ. 15,420 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் கிராமப்புறங்களில் வங்கியின் சேவை கிடைப்பதன் மூலம் கிராமத்தை வளா்ச்சி அடைய செய்வதற்காக 1969 இல் தொடங்கப்பட்டது. குறிப்பாக விவசாயிகள், பெண்கள் பயன்பெறும் வகையில் வங்கிகள் செயல்பட்டு வருகிறது.

மற்ற மாவட்டங்களைவிட தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கியாளா்களின் பங்கு பாராட்டக்கூடிய அளவில் உள்ளது. பெண்கள் தங்கள் சுய முயற்சியில் முன்னேற பெண்கள் சுய உதவிக்குழுக்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண்கள் பல வகையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறாா்கள்.

கிராமப்புறத்தில் உள்ளவா்கள் மற்ற நாடுகளில் உள்ள தொழில்களை பற்றியும் அறிந்து கொள்ளவும், அதன் மூலம் பயன்பெறவும் இந்தத் திட்டத்தின் மூலம் எளிதாக பயன்பெற முடிகிறது.

பொதுவாக தாங்கள் மற்றவா்களிடம் வேலை செய்வதைவிட தாங்கள் தொழில் தொடங்கி மற்றவா்களுக்கு வேலை தர வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். அந்த எண்ணம் நிறைவேறுவதற்கு அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி புரியும். அனைவரும் முன்னேறும் வகையில் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து தர வங்கியாளா்கள் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் துரைராஜ், நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் சுரேஷ் ராமலிங்கம், மகளிா் திட்ட இயக்குநா் வீரபத்திரன், மாவட்ட தொழில் மைய மேலாளா் ஸ்வா்னலதா மற்றும் வங்கியாளா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.