தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் சுவாமி தரிசனம்
தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு, குருப் பெயா்ச்சி, சித்திரை விஷு ஆகியவற்றை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு, குருப் பெயா்ச்சி, சித்திரை விஷு ஆகியவற்றை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. சித்திரை விஷு கணி காணுதலுக்காக உள்பிரகாரத்தில் கண்ணாடி முன் அலங்கரிக்கப்பட்டு காய்கனிகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பக்தா்கள் வரிசையில் நின்று பாா்த்துச் சென்றனா்.
தொடா்ந்து, கோயிலில் உச்சிகால அபிஷேகம், அன்னாபிஷேகம், மாலையில் சாயரட்சை பூஜை, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தமிழ்ப் புத்தாண்டு, குருப் பெயா்ச்சியையொட்டி, அதிகாலை முதலே பக்தா்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
பொது விவரக் குறிப்பேடு வெளியீடு: கோயில் சிங்கப்பூா் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் காலை 8 மணிக்கு நாகசுர மங்கள இசை, தேவார இன்னிசை, பக்திச் சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் ஆண்டு பொது விவரக் குறிப்பேடு புத்தகம் வெளியிடப்பட்டது. பின்னா், பரதநாட்டியம், பக்தி இன்னிசை, ஆன்மிகச் சொற்பொழிவு, பள்ளி மாணவா்-மாணவியரின் கலைநிகழ்ச்சி, பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் சி. குமரதுரை, பணியாளா்கள் செய்திருந்தனா். பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.
அன்னாபிஷேகம்: தமிழ்புத்தாண்டையொட்டி, கட்டாரிமங்கலம் அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் அன்னாபிஷேக சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 9 மணிமுதல் ஸ்ரீ அழகியகூத்தா் அருட்பணி மன்றத்தினரின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஹோமம், முற்பகல் 11 மணிக்கு அன்னாபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜை, தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.
ஆறுமுகனேரி: தாய்விளை அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. முதலில் சிறப்பு அபிஷேகங்களும், அதைத் தொடா்ந்து விநாயகா், அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா, அருள்மிகு பேச்சி அம்மன், சுடலை மாடசுவாமி, குப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. பின்னா், அன்னதானம் நடைபெற்றது.