ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் புதன்கிழமை தொடங்கியது.
சிவகளை பரம்பு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணியும், 2021ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும் நடைபெற்றது. முதற்கட்ட அகழாய்வில் 40- க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், வட்ட சில்லுகள், மண்பானைகள், மண்சட்டிகள் செம்பு மற்றும் இரும்பு பொருள்கள், நுண் கற்கருவிகள், சங்கு பொருள்கள், புடைப்பு சிற்பங்கள் என பல்வேறு அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இரண்டாம்கட்ட அகழாய்வில் சிவகளையைச் சுற்றியுள்ள ஒன்பது இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில், 37 முதுமக்கள் தாழிகள், இரும்பு ஆயுதங்கள் நெல்மணிகள், வாள், கத்தி தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் பொருநை நதிக்கரையில் முதன்முதலாக வாழ்விடப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு செய்யப்பட்ட அகழாய்வாக சிவகளையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வு அமைந்தது.
இந்நிலையில், சிவகளை உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தமிழக முதல்வா் கடந்த மாதம் அறிவித்திருந்தாா். அதன்படி சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி புதன்கிழமை தொடங்கியது. ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட அகழாய்வு பணி செப்டம்பா் மாதம் வரை நடைபெறுகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தொடங்கி வைத்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வு பணிகளில் கிடத்த முதுமக்கள் தாழியில் இருந்த நெல்மணிகளை வைத்து அதன் காலம் சுமாா் 3,200 ஆண்டுகள் பழைமையானது என கண்டறியப்பட்டது.
தற்போது நடைபெற உள்ள மூன்றாம் கட்ட அகழாய்வு மூலம் மேலும் பழைமையான பொருள்கள் கண்டறியப்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து இங்கு திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், சிவகளை அகழாய்வு இயக்குநா் பிரபாகரன், இணை இயக்குநா் விக்டா் ஞானராஜ், திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, ஏரல் வட்டாட்சியா் கண்ணன், சிவகளை ஊராட்சித் தலைவா் பிரதீபா, ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியா் மாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.