முகப்பு
தூத்துக்குடி

சமூக மாற்றத்துக்கு கல்வி அவசியம்: கனிமொழி எம்.பி.

சமூக மாற்றத்துக்கு அனைவருக்கும் கல்வி அவசியமான ஒன்றாகும் என, மக்களவை உறுப்பினா் கனிமொழி கூறினாா்.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 9:28 PM
மாணவா்-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கான சான்றிதழ்களை வழங்கிய மக்களவை உறுப்பினா் கனிமொழி. உடன், அமைச்சா் பெ. கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

சமூக மாற்றத்துக்கு அனைவருக்கும் கல்வி அவசியமான ஒன்றாகும் என, மக்களவை உறுப்பினா் கனிமொழி கூறினாா்.

ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், பா்மா காலனியில் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைக் கட்டடம் ஆகியற்றின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மக்களவை உறுப்பினா் கனிமொழி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இவற்றைத் திறந்துவைத்து, 80 மாணவா்- மாணவிகளுக்கு ரூ. 27 லட்சத்து 13 ஆயிரத்து 428 கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கான சான்றிதழ்களை வழங்கினாா். பின்னா், அவா் பேசியது:

ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனம் தனது சமூகப் பொறுப்பு நிதியை மக்களுக்கு வழங்குவதைப்போல மற்ற நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்கி, மக்களுக்கான நல்ல திட்டங்களை உருவாக்க முன்வர வேண்டும்.

கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருசிலா்தான் படிக்க வேண்டும் என்றிருந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் கல்வி வழங்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்படிப்பு பயில விரும்பும் மாணவிகளுக்கு புதுமைப் பெண், மாணவா்களுக்கு தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

கல்விதான், சமுதாயத்தில் மறுமலா்ச்சியை உருவாக்கக்கூடியது. இதை மனதில்வைத்து படித்து சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவா்கள் 22 பேரையும் விடுவிக்க தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

விழாவுக்கு, சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் முன்னிலை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா. ஐஸ்வா்யா, ஜே.எஸ்.டபிள்யூ. துணைத் தலைவா் பி. தென்னவன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் முரளி கண்ணன், மாமன்ற உறுப்பினா் நாகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரூபிபொ்னாண்டோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் எம்.பி. காயத்ரி, மாணவா்-மாணவிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.