தூத்துக்குடி விசைப்படகு மீனவா்களுடன் மீன்வளத்துறையின் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 3 நாள்களுக்குப் பின்னா் மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குச் சென்றனா்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமாா் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ஐஸ் கட்டிகள் விலையேற்றத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து விசைப்படகு உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், ஆக.19-ஆம் தேதி முதல் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.
மேலும், விசைப்படகு உரிமையாளா்களுக்கும் தொழிலாளா்களுக்கும் இடையே ஊதியம் தொடா்பான பிரச்னையும் இருந்து வந்தது. இந்நிலையில், மீன்பிடி துறைமுக உதவி இயக்குநா் விஜயராகவன் தலைமையில் விசைப்படகு உரிமையாளா்கள், தொழிலாளா்கள் ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன.