விளாத்திகுளம்: மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இந்த நாடு காத்திருக்கிறது என்றாா் மக்களவை உறுப்பினா் கணிமொழி.
விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் குறுக்குச்சாலை, வேடநத்தம், குளத்தூா், கீழவைப்பாறு, வேம்பாா், சூரன்குடி, அரியநாயகிபுரம், விளாத்திகுளம், கரிசல்குளம், நாகலாபுரம், சின்னவநாயக்கன்பட்டி, புதூா், சிவலாா்பட்டி ஆகிய பகுதிகளில் மக்களை திங்கள்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தாா் கனிமொழி. வேடநத்தம் கிராமத்தில் அவா் பேசியதாவது:
எனக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு வழங்கிய அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த முறையை விட குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தாலும், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி வந்துள்ளது. ஆனால் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை. அதனால் ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இந்த நாடு காத்திருக்கிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ. வி. மாா்க்கண்டேயன் , திமுக ஒன்றியச் செயலா்கள் காசி விஸ்வநாதன், அன்புராஜன், ராமசுப்பு, சின்ன மாரிமுத்து, பேரூா் செயலா் வேலுச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.