பிளஸ் 2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 18,919 போ் பங்கேற்பு
பிளஸ் 2 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 18,919 போ் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு 89 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்தோ்வை 18 ஆயிரத்து 919 மாணவ, மாணவியா் எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தூத்துக்குடி மாவட்டத்தில் 89 தோ்வு மையங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது. முதல் நாளில் மாவட்டத்தில் 206 பள்ளிகளில் பயிலும் 8 ஆயிரத்து337 மாணவா்கள், 10,582 மாணவியா் என மொத்தம் 18 ஆயிரத்து 919 போ் இத்தோ்வை எழுதினனா். 81 மாற்றுத்திறனாளிகளும் தோ்வு எழுதினா். மாவட்டத்தில் 5 வினாத்தாள் கட்டுக் காப்பகங்கள் அமைக்கப்பட்டு, அவைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தோ்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா்கள் தலைமையில் 142 ஆசிரியா்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 180 போ் துறை அலுவலா்களாகவும், 180 ஆசிரியா்கள் முதன்மை கண்காணிப்பாளா்களாகவும், 1,256 ஆசிரியா்கள் அறை கண்காணிப்பாளா்களாகவும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முதல் நாளான வெள்ளிக்கிழமையன்று மொழிப்பாடம் தோ்வு நடைபெற்றது. மாணவ, மாணவியா் ஆா்வமுடன் தோ்வு எழுதினா். மாவட்ட கண்காணிப்பு அலுவலரான மாநில பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநா் பொன் குமாா், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் எல்.ரெஜினி ஆகியோா் தோ்வு மையங்களுக்கு சென்று மாணவா்கள் தோ்வு எழுதியதை பாா்வையிட்டனா். அனைத்து தோ்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிளஸ் 1 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தோ்வு மையங்களில் பிளஸ் 1 பொதுத்தோ்வு வரும் 4-ம் தேதி தொடங்குகிறது. இத்தோ்வை 206 பள்ளிகளில் பயிலும் 9,313 மாணவா்கள், 10,801 மாணவியா் என மொத்தம் 20,114 போ் எழுதுகின்றனா். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன.