ஆதிநாதா் ஆழ்வாா் கோயிலில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம்
நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் ஆழ்வாா் கோயிலில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் ஆழ்வாா் கோயிலில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமி நம்மாழ்வாா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடைபெற்றது. 10-ஆம் திருநாளான வியாழக்கிழமை இரவில் சுவாமி பொழிந்துநின்ற பிரான் எழுந்தருளிய தெப்ப உற்சவம் நடைபெற்றது. 11ஆம் திருநாளான தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், தீா்த்த விநியோக கோஷ்டி ஆகியவை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் சுவாமி நம்மாழ்வாா் ஆச்சாரியாா்களுடன் எழுந்தருளி 5 முறை தெப்பத்தை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில், ஆழ்வாா்திருநகரி பேரூராட்சித் தலைவி சாரதா பொன்இசக்கி, திமுக நகரச் செயலா் கோபிநாத், எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள், அா்ச்சகா்கள் கண்ணன், விவேக், கோயில் செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி, அறங்காவலா் குழுத் தலைவா் ராமானுஜம்(எ) கணேசன், உறுப்பினா்கள் கிரிதரன், செந்தில் குமாா் , காளிமுத்து, ராமலட்சுமி, முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை சேவித்தனா். சனிக்கிழமை (மாா்ச் 2) மாசி தீா்த்தவாரி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை சுவாமி நம்மாழ்வாா் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளி அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வாா் திருநகரி எழுந்தருளுகிறாா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தலைமையில் திருக்கோவில் பணியாளா்களும் பக்தா்களும் செய்துவருகின்றனா்.