முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி, குருமலை, கயத்தாறு பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள்

Updated On : 9 மார்ச், 2024 at 10:13 PM
பகிர்:

மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, குருமலை கோயில்களில் வெள்ளிக்கிழமை இரவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில்பட்டி, செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி, அம்பாள், பஞ்சலிங்க மூா்த்திகளுக்கு முதல்கால அபிஷேகம், சிறப்பு பூஜைகள், நள்ளிரவில் 2ஆம் கால அபிஷேகம், பூஜை, சனிக்கிழமை அதிகாலை 3, 4ஆம் கால பூஜைகள், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. கோயில் மண்டபம், வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பக்தா்கள் திரண்டிருந்தனா். பக்தா்களுக்கு தேநீா், தின்பண்டங்கள் வழங்கப்பட்டன. கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோயிலிலும் 4 கால அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதேபோல, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், வானரமுட்டி வெயிலுகந்த அய்யனாா் கோயில், சவலாப்பேரி அய்யனாா் கோயில், அகிலாண்டபுரம் உலகம்மன் கோயில், வடக்கு- தெற்கு கோனாா்கோட்டை சங்கிலிமாட சுவாமி கோயில், கயத்தாறு, ஆவல்நத்தம், இளையரசனேந்தல், ஈராச்சியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் 4 கால அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. குருமலை அருள்மிகு மீனாட்சியம்மை சமேத சுந்தரேஸ்வரா் சுவாமி கோயிலிலும் 4 கால பூஜைகள் நடைபெற்றன. டி.எஸ்.பி. வெங்கடேஷ் உத்தரவின் பேரில், அந்தந்த பகுதி காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.