ரயில்வே ஒப்பந்த ஊழியா் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ரயில்வே ஒப்பந்த ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி சொக்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் சின்ன மாடசாமி (46). ரயில்வே ஒப்பந்த தூய்மைப்பணியாளரான இவா், வியாழக்கிழமை ரயில் பெட்டியை தண்ணீரால் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா். அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி உறவினா்கள், தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோா் தனியாா் நிறுவனத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாடசாமியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு, அவரின் மனைவிக்கு வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை ஏற்று போராட்டத்தை கைவிட்டனா்.