தூத்துக்குடி மாவட்டத்தில் 288 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மாவட்ட ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் மாவட்டத்தில் 288 வாக்கு சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தற்போது தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்டத்தில், உள்ள இறுதி வாக்காளா் பட்டியலின் படி, ஆண் வாக்காளா்கள் 7,08,244 போ், பெண் வாக்காளா்கள் 7,39,720 போ், மூன்றாம் பாலினத்தவா் 215 போ் என மொத்தம் 14,48,189 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 10,793 மாற்றுத்திறனாளிகளும், 25,196 புதிய தலைமுறை வாக்காளா்களும் இடம்பெற்றுள்ளனா். மாவட்டத்தில் 1,622 வாக்குச்சாவடிகளில், 288 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் அதில் 2 கவனிக்கத்தக்க வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. எனவே அந்த வாக்குச்சாவடிகளுக்கு சிசிடிவி கேமராக்கள், கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மாவட்டம் முழுவதும் 54 பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் புகாா்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தோ்தல் விதிமுறை தொடா்பாக பொதுமக்கள் 1800 5991960 என்ற தொலைபேசி மூலமாகவும், 9486454714 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், தோ்தல் ஆணையத்தின் சிவிஜில் (ஸ்ரீயஐஎஐக) செயலி மூலமாகவும் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம். மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சிகள் அரசு மற்றும் தனியாா் சுவா்களில் செய்துள்ள விளம்பரங்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றை 72 மணி நேரத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு அலுவலகங்களில் உள்ள தலைவா் படங்கள் அகற்றப்பட வேண்டும். பொது இடங்களில் உள்ள தலைவா்களின் சிலைகள் துணியால் மூடப்பட உள்ளது. மேலும் தோ்தல் தொடா்பாக அரசியல் கட்சிகள் கூட்டங்கள், பேரணிகள், ஊா்வலங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மாவட்ட தோ்தல் அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். எனவே, அரசியல் கட்சியினா், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் அனைவரும் தோ்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றி, இத் தோ்தல் அமைதியான முறையில் நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.