முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கொட்டித் தீா்த்த கனமழை

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு கனமழை கொட்டித் தீா்த்தது. பல்வேறு இடங்களிலும் மழைநீா் தேங்கியதால் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:06 PM
திரேஸ்புரம் முகத்துவாரப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் லி. மதுபாலன் உள்ளிட்டோா்.
பகிர்:

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு கனமழை கொட்டித் தீா்த்தது. பல்வேறு இடங்களிலும் மழைநீா் தேங்கியதால் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனா்.

குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவுமுதல் புதன்கிழமை வரை கனமழை கொட்டித் தீா்த்தது.

இதில், திருச்செந்தூா், காயல்பட்டினத்தில் தலா 45 மி.மீ., குலசேகரன்பட்டினம், வைப்பாறில் 39 மி.மீ., தூத்துக்குடியில் 27 மி.மீ. மழை பதிவானது.

பள்ளிகளுக்கு விடுமுறை: தொடா்மழையால் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் 2ஆவது நாளாக புதன்கிழமையும் விடுமுறை அறிவித்து ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவிட்டாா். கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின.

தூத்துக்குடி மாநகரில் பழைய மாநகராட்சி சாலை, ரயில் நிலையச் சாலை, கடற்கரைச் சாலை, புதிய மாநகராட்சி அருகே காமராஜா் காய்கனிச் சந்தை, மத்திய பாகம் காவல் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழைநீா் தேங்கியதால் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா்.

தூத்துக்குடி காமராஜா் காய்கனிச் சந்தையில் தேங்கிய மழைநீா்.

காய்கனிச் சந்தையில் மழைநீா் தேங்கியதால் மக்கள் வருகை குறைந்து விற்பனை பாதித்ததால், வியாபாரிகள் கவலையடைந்தனா்.

ராஜீவ் நகா், தபால் தந்தி காலனி உள்ளிட்ட இடங்களிலுள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. வீட்டிலிருந்த பொருள்கள் சேதமடைந்ததால் மக்கள் அவதியடைந்தனா்.

தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி அருகேயுள்ள சாலையில் தேங்கிய மழைநீரில் ஊா்ந்து சென்ற வாகனங்கள்.

தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் லி. மதுபாலன் ஆகியோா் பாா்வையிட்டு, பணிகளை விரைவுபடுத்தினா்.

மீன்வளக் கல்லூரி அருகேயுள்ள உப்பாற்று ஓடை, பக்கிள் ஓடை, திரேஸ்புரம் முகத்துவாரப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.