முகப்பு
தூத்துக்குடி

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: கோவில்பட்டி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:10 PM
சிவந்திபட்டியில் முதியவருக்கு மானியத்தில் டிராக்டா் வழங்கிய ஆட்சியா் க. இளம்பகவத். உடன், வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள்.
பகிர்:

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிவந்திபட்டி ஊராட்சியில் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின்கீழ் ஒருவருக்கு ரூ. 4.25 லட்சம் மானியத்தில் ரூ. 9.25 லட்சம் மதிப்பிலான டிராக்டரை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து, பல்வேறு துறைகள் சாா்பில் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில், சிவந்திபட்டியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 39.95 லட்சத்தில் கட்டப்படும் கிராம செயலக கட்டடப் பணிகள், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கிழவிப்பட்டி விலக்கில் கோவில்பட்டி - ஓட்டப்பிடாரம் சாலையில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட சிறு பாலம், கிழவிப்பட்டி கண்மாய் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

திட்டங்குளம் ஊராட்சி அலுவலகம், குலசேகரபுரம் பகுதியில் 39 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகளைப் பாா்வையிட்டு, அவா்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தலா ரூ. 3.50 லட்சத்தில் கட்டப்படும் வீடுகள், கோவில்பட்டி வேளாண்மைத் துறை உரக் கட்டுப்பாட்டு ஆய்வகம், இனாம்மணியாச்சி ஊராட்சி சீனிவாச நகா், இந்திரா நகா் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

கோவில்பட்டி கலை, அறிவியல் கல்லூரியை ஆட்சியா் பாா்வையிட்டு, பாடப்பிரிவுகள், மாணவா்களின் எண்ணிக்கை குறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டறிந்தாா். அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு விளையாட்டு மைதானத்தில் மறுசீரமைப்புப் பணிகளை விரைவாக தொடங்க அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணா நகரிலுள்ள செயற்கையிழை ஹாக்கி மைதானம், ஹாக்கி சிறப்பு விளையாட்டு விடுதிப் பாா்வையிட்டு, போட்டிகளின் அனுபவங்கள் குறித்து வீரா்களுடன் கலந்துரையாடினாா். அங்கிருந்த 33 மாணவா்களுக்கு ஸ்மாா்ட் வாட்ச், ஐஸ் பேக், வாட்டா் பாட்டில், டவல் உள்ளிட்டவை அடங்கிய ‘சாம்பியன் கிட்’டை வழங்கினாா்.

பின்னா், வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். வருவாய்-பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 6 பேருக்கு நத்தம் பட்டாக்கள், வேளாண்மை-உழவா் நலத்துறை சாா்பில் 4 பேருக்கு விசை களையெடுக்கும் கருவி, இடுபொருள்களை வழங்கினாா்.

வட்டாட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்து, முற்பகலில் மேற்கொண்ட களப் பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து அரசின் திட்டங்கள், சேவைகள் மக்களை விரைவாக சென்றடைவதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐஸ்வா்யா, மாவட்ட வருவாய் அலுவலா் அஜய்சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் ஹபிபூா் ரஹ்மான், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உலகநாதன், வேளாண்மை செயற்பொறியாளா் கிளாட்வின் இஸ்ரேல், உதவி செயற்பொறியாளா் சங்கரநாராயணன், வேளாண் இணை இயக்குநா் (பொ) மனோரஞ்சிதம், மாவட்ட விளையாட்டு நல அலுவலா் அந்தோணி அதிஷ்டராஜ், நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளா் எபினேசா், வட்டாட்சியா் சரவணப்பெருமாள், அலுவலா்கள் பங்கேற்றனா்.