கால்வாய் கரைகளை சீரமைக்கக் கோரி கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மேலாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், ஆற்றங்கரையில் சேதமடைந்த பகுதிகளை விரைந்து சீரமைக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மேலாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், ஆற்றங்கரையில் சேதமடைந்த பகுதிகளை விரைந்து சீரமைக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய பற்றாளா் சந்தனராஜேஷ் முன்னிலை வகித்தாா். செயலா் சுமதி வரவேற்றாா்.
ஊராட்சி செலவினங்கள், தணிக்கை அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. தூய குடிநீா் வழங்குதல், மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு, உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடா்ந்து, கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் மேலாத்தூா் ஆற்றங்கரை, ஆத்தூரான்கால் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளை மழைக்காலத்துக்கு முன்பாக விரைந்து சீரமைக்க வேண்டும், தெற்கு ஆத்தூா் நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்லவும், ஆத்தூரான்கால் கரையோரமும், சாலையோரமும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நிற்கும் நூறாண்டுகள் கடந்த பனைமரங்களை அகற்றவும், கனமழையால் சேதமான வாழை, வெற்றிலைப் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராம நிா்வாக அலுவலா் ஜெய்லானி, கவுன்சிலா்கள், மகளிா் குழுவினா், பொதுமக்கள் பங்கேற்றனா். ஊராட்சி துணைத் தலைவா் பக்கீா் முகைதீன் நன்றி கூறினாா்.