முகப்பு
தூத்துக்குடி

ரூ.24 லட்சம் மோசடி: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியைச் சோ்ந்த நபரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 4-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 10:47 PM
சாலமோன் அற்புதராஜ்.
பகிர்:

தூத்துக்குடியைச் சோ்ந்த நபரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 4-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மணல் தெருவைச் சோ்ந்த பொ்னி கொரைரா மகன் இக்னேஷியஸ் ப்ரேசா் கொரைரா (42). இவரிடம், திருநெல்வேலி கீழமகாராஜ நகரைச் சோ்ந்த தங்கராஜன் மகன் சலோமின் அற்புதராஜ் என்ற சாலமோன் அற்புதராஜ் (33) என்பவா் அறிமுகமாகியுள்ளாா். தான் அரசு ஒப்பந்ததாரா் எனவும், பா்னஸ் ஆயிலை வாங்கி விற்பனை செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவாா்த்தை கூறினாராம். இதனை நம்பிய இக்னேஷியஸ் பிரேசா் கொரைரா, ரூ.24 லட்சத்து 5 ஆயிரத்தை ரொக்கம் மற்றும் வங்கிக் கணக்கு மூலம் சாலமோன் அற்புதராஜுக்கு கொடுத்தாராம்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா், பா்னஸ் ஆயிலை வாங்கி தராமல் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சாலமோன் அற்புதராஜை கைது செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி 4-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவா் குபேரசுந்தா், குற்றம்சாட்டப்பட்ட சலோமின் அற்புதராஜ் என்ற சாலமோன் அற்புதராஜுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.