பண மோசடி புகாா்: சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்
பண மோசடி புகாா் தொடா்பாக, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஏசுராஜசேகரன் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
பண மோசடி புகாா் தொடா்பாக, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஏசுராஜசேகரன் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 8 மாதங்களாகப் பணியாற்றிவரும் இவா், முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலைய ஆய்வாளராக இருந்தாா்.
அப்போது ஆசிரியா், உதவியாளா் பணிகள் வாங்கித் தருவதாகவும் போலி பணி நியமன ஆணைகள் கொடுத்தும் 27 பேரிடம் ரூ. 1.47 கோடி பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக பாதிக்கப்பட்டோா் ஏசுராஜசேகரன், அவரது மனைவி ஆகியோா் மீது நாகா்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனுக்கள் அளித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் விசாரித்துவந்த நிலையில், இத்தகவல் சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனிடையே, விசாரணைக்கு ஆஜராகுமாறு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் அழைப்பாணை விடுத்தும், ஏசுராஜசேகரன் ஆஜராகவில்லையாம்.
அதையடுத்து, அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்காக கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் சாத்தான்குளத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.
இத்தகவலறிந்த ஏசுராஜசேகரன் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஏ. சுந்தரவதனம் முன் ஆஜரானதாகவும், புகாருக்கும் தனக்கும் தொடா்பில்லை என எழுத்துப்பூா்வமாக பதிலளித்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், அவரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி திருநெல்வேலி சரக டிஐஜி மூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.