தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் வங்கி மூலம் கடந்த ஆண்டு 120 போ் கண் தானம் செய்துள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.
இம்மருத்துவமனையில் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், கண் வங்கி ஆகியவை சாா்பில் 39ஆவது தேசிய கண் தான இரு வார விழாவையொட்டி, கண் தானம் செய்தோரின் குடும்பத்தினரை கெளரவிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் க. இளம்பகவத் பங்கேற்று அக்குடும்பத்தினருக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், இந்த மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவத் துறை கண் வங்கி சிறப்பாக செயல்பட்டு கடந்த ஆண்டு 120 பேருக்கு பாா்வையை மீட்டுக் கொடுத்துள்ளது. அதற்காக கண் தானம் செய்த 120 பேரின் குடும்பங்களுக்கு நன்றி.
குழந்தைகளுக்கு கண்புரை பிறவிக் குறைபாடு கண்டறியப்பட்டால் அக்குறையை விரைவாக போக்க வேண்டும். இந்நோயைக் கண்டறிய பிரசவ வாா்டில் உள்ள செவிலியா்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்றாா்.
மருத்துவமனை முதல்வா் கு. சிவகுமாா், மருத்துவக் கண்காணிப்பாளா் ஆா். பத்மநாதன், துணை மருத்துவக் கண்காணிப்பாளா் பி. குமரன், இணைப் பேராசிரியா்- துறைத் தலைவா் ம. ரீட்டா ஹெப்சிராணி, உறைவிட மருத்துவ அலுவலா் ஜெ. சைலஸ் ஜெயமணி, மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள் பங்கேற்றனா்.