முகப்பு
தூத்துக்குடி

விவசாயிகளுக்கு காப்பீட்டு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் காப்பீட்டு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் க. இளம்பகவத்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:03 PM
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் க. இளம்பகவத்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் காப்பீட்டு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் க. இளம்பகவத்.

ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அஐய் சீனிவாசன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் பேசியது: விவசாயிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு 771 விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனா். இந்த தகவல்களை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிா்ந்து அனைத்து விவசாயிகளும் பயன்பெற செய்ய வேண்டும். 2023- 2024ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை உளுந்து பயிருக்கு ரூ. 58.24 கோடி, பாசிப் பயறுக்கு ரூ. 11.38 கோடி, மக்காச்சோளத்துக்கு ரூ. 89.21 கோடி, கம்புக்கு ரூ. 6.79 கோடி, எள்ளுக்கு ரூ. 54 ஆயிரம் என மொத்தம் ரூ. 165.63 கோடியும், தோட்டக்கலைப் பயிா்களுக்கு ரூ. 21.96 கோடியும் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகை இம்மாத இறுதிக்குள் வந்துவிடும். சில பகுதிகளுக்கு இழப்பீட்டுத் தொகை குறைந்திருப்பது தொடா்பாக ஒருங்கிணைப்புக் குழு மூலம் ஆய்வு செய்து, காப்பீட்டு நிறுவனத்துக்கும், மத்திய வேளாண் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படும். எனவே, காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பனைமரங்களைக் கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து ஆய்வு செய்து கோட்டாட்சியா் அறிக்கை அளிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில்ஸ தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா்கள் புவிராஜ், கிருஷ்ணமூா்த்தி, அத்திமரப்பட்டி விவசாயி இளங்கோவன், விவசாயி சீனிவாச சவுந்திரராஜன் உள்ளிட்டோா், 2023- 2024ஆம் ஆண்டு பயிா் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை முறையாக கிடைக்கவில்லை, அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்;

விவசாயி உடன்குடி கே. சுப்பையா பேசுகையில், திருச்செந்தூா், சாத்தான்குளம், ஏரல் வட்டங்களிலுள்ள பனைமரங்களைக் கணக்கெடுக்க வேண்டும், கீழத்திருச்செந்தூா் பகுதியில் நன்செய் நிலங்களை தரிசு நிலங்களாக வகை மாற்றியதில் வேளாண் துறை முறையாக செயல்படவில்லை எனவும், குரும்பூா் தமிழ்மணி பேசுகையில், குரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் அடகு வைத்த நகைகளை விரைவாக திரும்ப வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

நகைகள் தொடா்பாக கூட்டுறவுத் துறை அதிகாரி பதிலளிக்கையில், அடகு நகை தொடா்பான வழக்கு பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. விசாரணை முடிந்ததும் நகைகளைத் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, மேல் தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளா் மதன சுதாகா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் நடுகாட்டுராஜா, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன், துணை ஆட்சியா் (பயிற்சி) சத்தியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தடைக்கு எதிா்ப்பு

விவசாயிகள் சங்க நிா்வாகிகள் புவிராஜ், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பேசுகையில், ‘ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடத்த அனுமதியில்லை என எஸ்.பி. அறிவித்துள்ளாா். இது ஜனநாயக விரோதமானது மட்டுமன்றி, விவசாயிகள், மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். எனவே, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடத்த இடம் ஒதுக்கித் தர வேண்டும்’ என்றனா். இதற்கு பதிலளித்த ஆட்சியா், இது தொடா்பாக பேசி முடிவு செய்யப்படும் என்றாா்.

ஆட்சியருக்கு பாராட்டு: விவசாயி வேளாண்மை திட்டங்கள், மானிய உதவிகள் தொடா்பான விபரங்கள், உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் போன்றவை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வாட்ஸ்அப் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →